0
137

காரைக்கால் மாதாகோயில் வீதியில் இயங்கும் ஒரு ஷாப்பிங் கடை. குளிரூட்டப்பட்ட கடைக்குள் காய்கறிப் பிரிவு. வெள்ளரிக்காய் அரைகிலோ வாங்கினேன். வீட்டுக்கு போகிற வழியில் பசி. வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. வண்டியில் மாட்டியிருந்த பையில் வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து, பாட்டில் தண்ணீரில் கழுவினேன். வண்டியை ஒட்டிக் கொண்டே தின்ன முற்பட்டேன். பசியில் இரண்டு வாய் தின்றிருப்பேன். வெள்ளரிக்காயில் இருந்து வந்த வடையை உணர்ந்தேன். எங்கோ அந்த வடையை உணர்ந்திருக்கிறேன். யோசனையுடன் வீட்டில் அமர்ந்து மீண்டும் முகர்ந்து பார்த்தேன்.
வயலில் நெல்லுக்கும், காய்கறி செடிகளுக்கும் அடிக்கிற பூச்சிக்கொல்லி மருந்து வாடை முகத்தில் அறைந்தது. செடியில்தானே மருந்து அடிப்பார்கள். காய்கறியிலுமா? வேளாண்துறை நண்பருக்கு போனைப் போட்டேன்.
“நண்பா..காசு போனால் போகட்டும். அந்தக் காய்களை தூக்கி எறிந்து விடுங்கள். ஆடு,மாடு வராத இடமாக பார்த்து வீசுங்கள்” என்றார்.
காரணத்தையும் சொன்னார்.
“இந்தக் காய்கள் பார்க்க பிரெஷ்ஷாக இருக்கவும், பச்சையாக தெரியவும் ஸ்ப்ரே ஒன்றை தெளிப்பார்கள். குளிர்ந்த சீதோஷண நிலையில் வைத்தது விற்பார்கள். காற்று படும் இடத்தில் வெள்ளரிக்காய் இருந்தால் அது தோல் சுருங்கி கயிறு போல மாறிவிடும். இந்த கைகளை பச்சையாகவோ, சமைத்தோ உண்டால், ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். பக்க விளைவுகளும் உருவாகும். முடிந்தவரை ஷாப்பிங் மால்களில் காய்கறிகளை வாங்காதீர்கள். காய்கறி,கீரை விதைகளை வாங்கி நீர் புழங்குகிற கொல்லைப்புறத்தில் ஊன்றுங்கள். அழியக்கூடிய குப்பையை மக்க வைத்து உரமாக போடுங்கள்.” என்றார்.
தெரிந்தவர்களிடம் முருங்கை, கல்யாண முருங்கை, வாதநாராயணன், கிளுவை போத்துக்களை வாங்கி கம்பவுண்டை ஒட்டி நாடுங்கள். சத்தான, பயனுள்ள கீரைகளை மாதம் முழுவதும் பெறலாம். தேவையற்ற பாத்திரங்கள், டப்பாக்களில் மண் நிரப்பி சிறுகீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி பயிரிடலாம். சிறு தொட்டிகளில் காய்கறிகளையும் பயிரிடலாம். விடுமுறை நாட்களில் காலைமுதல் மதியம் வரை குழந்தைகளுடன் ஜாலியாக செய்யலாம். வேடிக்கையாக செய்கிற வீட்டுத்தோட்டம் உங்களுக்கு பெருமிதத்தையும், பாராட்டையும், பலனையும் தரும் ட்ரை பண்ணுங்க” என்றார்.
ட்ரை பன்றோம்!

தம்பி மாரிமுத்து