விஜயபாஸ்கர் எனும் திரைஇசை வித்தகன்

0
619

ப.கவிதா குமார்

இசையமைப்பாளரான இன்ஜினியரிங் பொறியாளர்
=========================

தமிழ் திரையிசையை ரசிக்கக்கூடிய பாமர ரசிகனின் எண்ண ஓட்டங்களில் பல பாடல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல அற்புதமான பாடல்களுக்கு இசை இவர் தான் என தப்புக்கணக்கு போடுகிறோம் ஏனெனில், பிரபலமானவர்கள் தான் அப்படியான பாடல்களைத் தருவார்கள் என்ற பொதுப்புத்தி அப்படி யோசிக்க வைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் 1970ம் ஆண்டுகளில் வெளியான பல பாடல்களைக் கேட்ட போது எம்எஸ்.விஸ்வநாதன் பாடல் தான் என என்னைப் போல நீங்களும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில், அப்பாடல்களால் இன்றளவும் புகழ்பெற்ற பாடகர்கள் பலர், அப்படத்தின் இசையமைப்பாளர்களை நினைவுப்படுத்துவதில்லை.

1976ம் ஆண்டு இசைஞானி இளையராஜா அறிமுகத்திற்கு முன்பே பல புதிய இசையமைப்பாளர்கள், பிற மொழியைச் சேர்ந்தவர்கள், தமிழ் திரையிசைக்கு மிக அற்புதமான ஏராளமான பாடல்களைத் தந்துள்ளனர்.

அன்னக்கிளி படத்தை எடுக்க பஞ்சு அருணாசலம் முடிவு செய்த போது இசைஞானி தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாய் இருந்தார்.

” ஆனால், அவர் வேண்டாம்… ஏற்கனவே நீங்கள் ஏற்கனவே எடுத்த படங்களின் இசையமைப்பாளரின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. அவரையே பயன்படுத்துங்கள் ” என்று பஞ்சு அருணாசலத்திடம் அவரது உதவியாளர் ஒருவர் சொன்னதாக இசைஞானியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

இசைஞானிக்கு பதில், அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்க பரிந்துரைக்கப்பட்ட நபர், அப்போது பல சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.

ஆனாலும், பஞ்சு அருணாசலம் விடாப்பிடியாக இசைஞானியைத் தான் அறிமுகம் செய்து வைத்தார். அவரை என்றென்றும் தமிழ் இசையுலகம் மறந்து விடக்கூடாது.

இசைஞானி வேண்டாம்… இவரே இருக்கட்டும் என பஞ்சு அருணாசலத்திடம் சொல்லப்பட்ட இசையமைப்பாளரைப் பற்றித் தான் இந்தப்பதிவு.

மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் புகுந்தது இந்த இசைப்புயல். படித்தது மெக்கானிக்கல் இன்ஜியரிங். சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் ஒட்டிக் கொண்டதால், இயந்திரங்களுக்குப் பதில், இசைக்கருவிகள் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது.

இதனால் முறைப்படி சாஸ்திரிய சங்கீதம் பயின்றார். மிகச்சிறந்த பியானோ மற்றும் வயலின் இசைக்கலைஞனாக மிளிர்ந்தார். இந்தியில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான நவுஷாத்திடம் இசைப்பயிற்சி பெற்றார்.

இவரது இசையில் முதல் படம் வெளிவந்த ஆண்டு 1954ம் ஆண்டு. ” ஸ்ரீராம் பூஜா” என்ற கன்னப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்தி மெட்டுக்கள் தான் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய ஒரிஜினாலட்டி இசையால் அனைவரையும் கவர்ந்தார்.

மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் ராஜநாகம் படத்தில் உருவான ” தேவன் வேதமும் கண்ணன் கீதமும்” பாடல் காலத்தால் அழியாதது. அப்படத்தின் ஒரிஜினல் கதை இயக்குனர் புட்டண்ணா கனகலுடையது. அப்படம் கன்னடத்தில் “நகரபாவு” என்ற பெயரில் வெளியானது. இதில் நமது மெக்கானிக்கல் இன்ஜினியர் தான் இசையமைப்பாளர்.

“நகரபாவு” பாடல்கள் வெற்றியடையவும் நிறைய வாய்ப்புகள். ஏராளமான படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார். இதனால் அவருக்கு எல்லா மொழிகளிலும் இருந்து அழைப்பு வந்தது. மலையாளத்தின் மிகச்சிறந்த இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘மதிலுகள் ‘ படத்துக்கு இவர் தான். வைக்கம் முகமது பஷீரின் நாவல் உயிர் பெற்றது. ஏராளமான விருதுகளை இப்படம் பெற்றது.

இயக்குநர் எஸ்பி.முத்துராமன் இயக்கிய எங்கம்மா சபதம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அந்த இசையமைப்பாளர் போட்ட மெட்டு அபாரம் எனப் பாராட்டப்பட்டது. கவியரசு கண்ணதாசன் எழுதி எஸ்பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் பாடிய இப்பாடல், இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளில்லை.

அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

இப்பாடலில் ” கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது” என வாணியின் குரல் ஓங்கி ஒலிக்கும் போது, “பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா பூமாலை நான்சூடும் நாள் வந்ததா, நான் நீயன்றோ நீ நானன்றோ” என எஸ்பி.பாலசுப்பிரமணியம் ஹஸ்கி வாய்ஸில் பாடுவதும் யாருய்யா இந்த இசையமைப்பாளர் எனக் கேட்க வைத்தது.

இதே பாடல் வரிகளை பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் புகழ்பெற்ற பாடலுக்கு இசையமைத்தவர் விஜயபாஸ்கரைப் பற்றித்தான் இந்த பதிவு ஏழுமுறை சிறந்த இசையமைப்பாளருக்காக கன்னடத்தில் விருது பெற்றவர் இவர். .

உங்க வீட்டு கல்யாணம் என்ற படத்தில் ” நீ என்னென்ன சொன்னாலும் புதுமை” என தேங்காய் சீனிவாசனும், ஜோதிலெட்சுமியும் இணைந்து பாடிய கதம்பப்பாடல் ஒன்று உண்டு. “ஹம் தும்” என்ற பிரபலமான ஹிந்தி பாடல் மட்டுமின்றி “தெரியதோ நோக்கு தெரியாதா” என்று மனோரமாவும் இந்தப்பாடலில் பாடியிருப்பார். தங்கவேலு, சோ உள்ளிட்ட இன்னும் பலரும் இப்பாடலில் நடித்திருப்பார்கள்.

ஜெய்சங்கர், ஜெயசித்ரா நடித்த யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்ற படத்திற்கு விஜயபாஸ்கர் இசையில் “முத்துக்கள் சிந்தி தித்திக்கும்” என எஸ்பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் ஹம்மிங்கோடு வந்தது அழகிய பாடல். ஜெய்சங்கர் நடித்த உன்னைத்தான் தம்பி படத்தில் “மணிவிளக்கே, மாந்தளிரே” என்ற பாடல் எஸ்பி.பாலசுப்பிரமணியம், பி.வசந்தா குரலில் இனிமையாய் ஒலித்தது.

விஜயபாஸ்கர் இசையில் இசைராணி வாணிஜெயராம் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். எஸ்பி.முத்துராமன் இயக்கியத்தில் காலங்களில் அவள் வசந்தம் படத்தில் வாணி ஜெயராமின் புகழ்பெற்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் தனித்து பாடிய இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசனையைத் தருகிறது.

மிகச்சவாலான விஜயபாஸ்கரின் கர்நாடக இசைக்கு போட்டியாக வாணியின் குரல் ஒலிக்கிறது. இந்த பாடலைக் கேளுங்களேன்….

மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது.

மற்றொரு பாடல் கவியரசு கண்ணதாசனின் வரிகளில் வாணியின் குரலில் கேட்க கேட்க சிலிர்க்கிறது. இப்பாடலில் அவர் எங்கே, எங்கே என கேட்க கேட்க, வாணியின் ஒட்டு மொத்த பாடலையும் எங்கே என திரும்பிப் பார்க்க வைக்கிறது.

பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் அவர் பாடிய ‘முதன்முதல் வரும் சுகம் இதுவென’ வித்தியாசமான நடை.

அன்றைய காலத்தில் படத்தின் தலைப்பைத் தாங்கி பாடல்கள் வருவது உண்டு. அப்படி 1975ல் சிவி.ராஜேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன், மஞ்சுளா நடித்த படம் மாலைச்சூட வா. இப்படத்தின் தலைப்பு உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தால் இந்த பாடலும் ஞாபகத்திற்கு வரும்.

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா

கேஜே.யேசுதாஸ் குரலில் ஒலிக்கும் இப்பாடலில் வரிகளின் செழுமையை அவர் குரலில் கேட்க கேட்க இனிமையாய் இருக்கிறது.

குளிர்கொண்ட மேகம்தானோ மலர்க்கொண்ட கூந்தல் கடல்கொண்ட நீலம்தானோ சுடர்க்கொண்ட கண்கள் மடல்கொண்ட வாழைதானோ மனம்கொண்ட மேனி தழுவாதபோது உறக்கங்கள் ஏது

இப்படியான கவித்துவமான வரிகளுக்கு விஜயபாஸ்கர் மிக அழகாக இசையூட்டியிருப்பார். இப்படத்தில் எஸ்பிபி,பி.சுசீலா இணைந்து பாடிய

பட்டுப் பூச்சிகள் வட்டம் அடித்தால்
கட்டி அணைக்கும் பூச்செண்டு
கட்டுக்காவலை மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

பாடலின் வேகம் நம்மை பரபரக்க வைக்கிறது.
டிஎம்.சௌந்தராஜன் பாடிய கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு பாடலை ரசிக்கலாம். இப்படத்தில் பாடல்களை பதிவேற்றம் செய்துள்ள tamilmp3online.in உள்ளிட்ட பல நிறுவனங்கள் இசையமைப்பாளர் எம்எஸ்.விஸ்வநாதன் என்றே தவறாக சுட்டிக்காட்டியுள்ளன.

காலமடி காலம் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் பாடிய ‘எனக்கொரு உதவி செய் கண்ணா கண்ணா’ பாடலில் சபரபாபப்பா என எஸ்பிபி ஆலாபனை செய்வதை ரசிக்கலாம். கல்யாணமாம் கல்யாணம் படத்தில் டிஎம்.சௌந்தராஜன் எஸ்.ஜானகி பாடிய புகழ்பெற்ற பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் டிஎம்எஸ் ஹம்மிங் மிக மிக அழகாக ஒலிக்கும். இப்பாடல் பல இடங்களில் எம்எஸ்.விஸ்வநாதன் இசை சுட்டப்பட்டுள்ளது.

ஆனால், விஜயபாஸ்கர் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. தமிழ் இசை உலகில் மறக்க முடியாத பாடல்.

இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம்
மனதில் ஆனந்த ராகம்

இளமை சிந்தும் ஜெயசித்ராவிற்காக இப்பாடலை பல முறை பார்த்தும், கேட்டும் ரசித்தேன். சிவக்குமார், ஸ்ரீப்ரியா நடித்த ஆண் பிள்ளை சிங்கம் என்ற படம். இப்படத்தில் ‘கண்ணடி கண்ணடி பட்டால்” பாடலும், சாக்ஸ்போன் அதிரும் “சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ” என்ற கேபரே பாடலும், “காலம் பல காத்திருந்தோம் கண்ணபெருமானே” என்ற பக்திப் பாடலும், “மயக்கம், குழப்பம் சேரும் போது” என்ற நம்பிக்கை தரும் பாடலுக்கும் விதவிதமான இசைக்கோலங்களை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளா

கமல்ஹாசனின் பேர் சொல்லும் பிள்ளை படத்திற்கு முன்பே அந்த காலத்தில் பேர் சொல்ல ஒ பிள்ளை என வந்து விட்டது. முத்துராமன் இருவேடங்களில் நடித்த இந்தப் படத்தில் ” வாலிபத்தின் எண்ணங்கள்” என்ற தாபம் நிறைந்த பாடலையும்,” கலைமகள் உறவும் திருமகள் வரவும்” என்ற சங்கீத ஆலாபனையில் ஒரு பாடலையும் வாணி ஜெயராம் பாடியுள்ளார். “முத்துநகை சிந்தி வரும் ராஜா” என பி.சுசீலா பாடிய பாடலையும் ரசிக்கலாம்.

எல்ஆர்.ஈஸ்வரியின் தங்கை எல்ஆர்.அஞ்சலி. மிகச்சில பாடல்களையே பாடியுள்ளார். உங்கள் விருப்பம் படத்தில் விஜயபாஸ்கர் இசையில் கோவை சௌந்தராஜனுடன் அவர் இணைந்து பாடிய இனியபாடல்.

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

இதே படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம் “என்ன மகராணி அழகு, அழகு அழகு” என்ற வித்தியாசமான மெட்டில் அமைக்கப்பட்ட பாடலை பாடியிருக்கிறார்கள்.

புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய சவுந்தர்யமே வருக வருக படத்தில் விஜயபாஸ்கரின் இசையில் வாலி அத்தனை பாடல்களையும் எழுதியுள்ளார். வாணி, எஸ்பிபி பாடிய “இதோ உன் காதலி கண்மணி” என்ற மெலடியும்,” ரஸம் பழரஸம் ரகம் பலரகம்” என எஸ்பிபியின் குலைவான ஒரு
பாடலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக வாணியும், எஸ்பிபியும் பாடிய அழகிய பாடலும் உள்ளது.

ஆகாயம் தானே அழகான கூரை
காணும் இடம் யாவும்
காதலர்கள் வீடு காணும் இடம்

இப்படத்தில் மலேசியா வாசுதேவன், எல்ஆர். அஞ்சலி குரல்களில் ஒலிக்கும் ஒரு பாடல், ஒரு தலை ராகம் படத்தில் வரும் கூடையில கருவாடு பாடலின் இசையை மட்டுமின்றி பாடலின் வரிகளையும் ஞாபகப்படுத்துகிறது. யூடியூப்பில் இப்பாடல் உள்ளது கேட்டுப்பாருங்களேன்.

சிந்தாமணி செந்தாமரை வந்தாளடி ஆத்தாங்கரை என்ற பாடலில் அம்மாளு அவ இப்ப நம்மாளு என மலேசியா ஓங்கி அடிக்கும் போது டி.ராஜேந்தர் இல்ல விஜய ராஜேந்தர் கண்முன் வந்து வந்து போகிறார்.

கமல்ஹாசன் நடித்த மோகம் முப்பது வருஷம் படத்தில் கேஜே.யேசுதாஸின் மிக அருமையான தத்துவப்பாடலுக்கு விஜயபாஸ்கர் இசையமைத்துள்ளார்.பியானோ இசையில் ஒலிக்கும் கண்ணதாசனின் தத்துவம்,

எனது வாழ்க்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே

இப்படத்தில் எஸ்பிபி பாடிய சங்கீதா ராகங்கள் இல்லாமலா பாடலும் ரசிக்க வைக்கிறது.
எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனத்தில் வந்த முக்கியமான படம் மயங்குகிறாள் ஒரு மாது . படத்தின் கதையை தலைப்பிலேயே சொன்ன படம். கதாநாயகியை ஆபாசப்படம் எடுத்து வைத்து வில்லன் மிரட்டும் வித்தியாசமான கதை. இப்படத்தில் அத்தனை பாடல்களும் விஜயபாஸ்கர் இசையில் தேனாக ஒலித்தன. கண்ணதாசன் எழுதிய இப்பாடலை ரசிக்காதவர் யார் உளர்?

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை.
இன்றளவும் உலகம் முழுவதும்
எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின்ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய பாடல் இது. இதே படத்தில் கேஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் பஞ்சு அருணாசலத்தின் அழகிய வரிகள் குடும்ப உறவின் மேன்மையை அழகாய் சொல்லும்.

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென்ன நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்

இப்பாடல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடல் எனது பேவரைட். சுஜாதா என்ற நடிகையின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய இந்த படத்தில் இப்பாடலைக் கேளுங்கள்.

ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்

1977ல் வெளிவந்த ஆடு புலி ஆட்டம் படத்தில் எஸ்பி.பாலசுப்பிரமணியம் ,எல்ஆர்.அஞ்சலி பாடிய

வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கும் மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை

என்ற பாடல் இன்றளவும் இஸ்லாமிய சகோதர்களின் நேசிப்பிற்குரிய பாடலாக விளங்குகிறது. இப்படத்தில் இடம்பெற்ற உறவோ புதுமை பாடலும் எஸ்பிபி பாடியது தான்.
கே.பாலச்சந்தர் 1978ல் இயக்கிய படம் தப்புத்தாளங்கள். ரஜினிகாந்த் ரவுடியாக நடித்திருப்பார். சரிதா தமிழில் அறிமுகமான படம். பாலச்சந்தருக்கு சிறந்த வசனத்திற்கான விருது இந்த படத்திற்கு கிடைத்தது. படம் படுபிளாப். ஆனால், பாடல்களை இப்போதும் கேட்கலாம். இசை விஜயபாஸ்கர். கவியரசு கண்ணதாசன் மூன்று பாடல்களை எழுதியிருந்தார்.
எம்எஸ்.விஸ்வநாதன் பாணியில் எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய “தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதைகள்” புது ரசனையை தந்தது. “அழகான இளமங்கை தட்டிக் கொடுத்தாள் அதற்காக மகராசன் தொட்டில் கொடுத்தான்” என்ற வாணியின் இனிய குரலையும், “என்னடா பொல்லாத வாழ்க்கை ” என்ற எஸ்பிபியின் அலட்டலான குரலையும் பாடல்கள் ரசிக்க வைத்தன.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, கொங்கணி,ஒரியா, துளு உள்ளிட்ட 670 படங்களுக்கு விஜயபாஸ்கர் இசையமைத்துள்ளார். தமிழில் 56 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டு பெங்களூருவில் அவர் காலமானார். இசையால் வசமாக்கிய அவரின் பாடல்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.