ராஜராஜன் மீண்டும் வந்தான்…

0
319

சோழ மண்டலத்தில் மீண்டும்
மாமன்னர் ராஐராஜ சோழன்!!

தமிழர்களின் ஆற்றல் மிக்க அடையாளமாய் அருண்மொழித் தேவனாய் அறியப்பட்டு , ராஜராஜசோழனாய் தரணியெங்கும் கொண்டாடப் பட்டு , சிவபாதசேகரனாய், சிவ நெறிச் செல்வனாய் வணங்கப்பட்டுவரும் மாமன்னர் ராஜராஜ சோழன்,அய்யன் சிவனுக்கு மிகப் பெரிய கற்றளி எழுப்பி பொறியியல் அதிசயமான கட்டமைப்பில் மாபெரும் ஆலயம் அமைத்து வழிபட நினைத்தார் .

சிந்தை முழுதும் சிவநெறியையே தாங்கி குருநாதர் கருவூர்த்தேவரின் அன்பான ஆலோசனையில், பெருந்தஞ்சன் ராஜராஜ குஞ்சரமல்லன் தலைமை சிற்பியாய் இருந்து ராஜராஜேஸ்வரம் எனும் பெருவுடையார் கோயில் 1010 ல் குடமுழுக்கு செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது!

கோயில் கட்டுவதற்கு தலைமை நிர்வாகியாக இருந்து செயல்பட்டு “பொய்கை நாட்டு கிழவன் சூரியன் ஆதித்தனாகியாக தென்னவன் மூவேந்த வேளான்” மாமன்னர் ராஐராஜன் மீது கொண்ட அதீத பற்றினால், சோழர் படைத் தளபதி மும்முடி பிரம்மராயன் கிருஷ்ணராமன் ஆலோசனையில் மன்னரின் திருவுருவத்தை அவர் அய்யன் சிவனை வணங்குவது போல நகலெடுத்து ஐம்பொன்னால் கச்சிதமாக வடித்து பட்டத்தரசி உலோகமாதேவி உட்பட 13 சிலைகளை மன்னர் உயிருடன் இருக்கும் போதே 1012ல் பெரிய கோயிலின் அர்த்தமண்டபத்தில் நிறுவினார்.

எத்தனை கோடி செலவு செய்தாலும், கற்பனைக்கு கூட எட்டாத இவ்வளவு பெரிய கோயிலை வழிபட வரும் மக்கள், கட்டு கோப்பான உடலமைப்பு கொண்ட மன்னரையும், பட்டத்தரசியையும் சேர்த்தே வழிபட்டு சென்றனர்.
தில்லை கோவிலில் இருந்து தேவார பதிகங்களை அந்தணர் பிடியில் இருந்து மீட்டு வந்து, ஓலைச்சுவடிகளை தூசி தட்டி, சிவநெறியை ஓங்க செய்யும் வகையில் பிடாதியார் எனும் ஓதுவார்களை நியமித்து தேவார பதிகங்களை தெருவெங்கும் ஒலிக்க செய்ததால், மன்னர் ராஜராஜன் “திருமுறை கண்ட சோழன்” எனப் போற்றபட்டார்.
சிவனே,மெய் சிலிர்க்கும் வகையில் வானுயர்ந்த விமானத்தோடு, சலவைக் கல்லால் சிறுதுளி கூட பெயர்க்க முடியாத உயர் தொழில்நுட்பத்தில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பெரிய கோவிலில் 12 தமிழ் எழுத்துக்களை போற்றும் வகையில் மனித உயரத்திற்கு மேம்பட்ட 12 அடி சிவலிங்கமும், பீடத்தோடு சேர்த்தால் 18அடி உயரம் தமிழ் எழுத்துக்களை போற்றும் விதமாகவும், அடி பக்கத்திலிருந்து விமான உச்சி 247 அடி, தமிழின் மொத்த எழுத்துக்களையும் குறிப்பிடும் விதமாக தமிழையும், சிவனையும் தூக்கி நிறுத்தும் விதமாக கட்டமைத்தார் அடியார்க்கு அடியாரான சிவநெறிச்செல்வன் ராஜ ராஜ சோழன்.

அது மட்டுமா?
மலைகளே இல்லாத சோழ மண்டலத்தில் 50,000 டன் சலவைக் கற்களால் கட்டமைப்பு . அதிலும் ராஜ ராஜன் வாயில் இரு பக்கமும் 36அடி உயரத்திற்கு ஒரே சலவைக் கல் நிலைவாசல்!
கிழக்கு மேற்காக 793அடியும், வடக்கு தெற்காக 397அடியையும் கொண்டுள்ளது.
கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ள மடப்பள்ளி எனும் சமையலறை உலகின் மிகப் பழமையான சமையலறை ஆகும். கோயில் திருப்பணி செய்யப்பட்ட 1010-ல் துவங்கப்பட்ட சமையல் இன்று வரை, அக்னி ஈஸ்வரன் சாட்சியாக கொண்டு ஒரு நாள் கூட தடைபடாமல் பக்தர்களுக்கு அமுது படைத்து வருகிறது..
இப்படி செயற்கரிய செய்த மன்னனின் திருவுருவ சிலையை, இரவு நடை சாத்தும் பொழுதில் சிவனுக்கு திருப்பள்ளி நிகழ்த்தும் போது, மன்னருக்கும் சேர்த்தே ஆராதனை செய்து வந்துள்ளார்கள். சித்திரை திருவிழாவின் போது சிவனுக்கு முன்னதாக இந்த ராஜ ராஜன் திருவுருவத்தை பல்லாக்கில் சுமந்து வந்து வழிப்பட்டு வந்துள்ளனர். அப்பேர்பட்ட மாமன்னர் திருவுருவ சிலையும், பட்டத்தரசி லோக மாதேவி சிலையும் 1932-ல் பெரிய கோவிலிலிருந்து மாயமாகி விட்டது.
அடியார்கள், பக்தர்கள் தமிழ் ஆர்வலர்கள், தொல்லியல் அறிஞர்கள், தஞ்சை பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தஞ்சை மக்கள் நாடு விடுதலை அடைந்த பிறகு, பிரதமர் நேரு தொடங்கி தொடர் கோரிக்கையாக முயற்சிசெய்து வந்துள்ளனர்.
தமிழறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் தொடர் தேடுதலில், சிலை குஜராத் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது தெரிய வந்தது.
1984-ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், முதல்வர் எம்.ஜி.ஆரும், பெரிய கோயிலுக்கு வந்தபோது மாமன்னர் சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரும் படி கோரிக்கை வைத்துள்ளார்கள்.
2010-ல் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு சதய விழாவிற்கு முன்பாக மாமன்னர் ராஜராஜனை மீட்டு கொண்டு வரவேண்டுமென அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசு, இறையன்பு IAS தலைமையில் குழு அனுப்பி அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்களின் உதவியுடன் சிலையை மீட்க தீவிர முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை!
நான் இங்கு S.P. ஆக சேர்ந்த அன்றே, பணியில் சேர்ந்த சில மணித்துளிகளில், அய்யன் சிவனை தரிசிக்க பெரிய கோயில் சென்றேன்! அப்போது தமிழாய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் போன்றோர் இந்த சிலையை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது தஞ்சை மக்களின் வாழ்நாள் ஆதங்கம் என ஏக்கத்தை வெளிப்படுத்தினார்கள்..

எப்படியாவது மாமன்னர் ராஜராஜனை, கூர்ஜர தேசத்திலிருந்து, சோழ மண்டலத்திற்கு அதுவும் அவர் படைத்த பெரிய கற்றளியான பெருவுடையார் கோயிலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிய நிலையில், வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களுடன் விவாதித்து கொண்டிருந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. திரு.பொன்.மாணிக்கவேல் அவர்கள், தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு வர சொன்னார். பெரிய கோயில், மாமன்னர் ராஜராஜன், பொய்கை நாட்டு கிழன் ஆதித்த சூரியன் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிலை காணாமல் போனது பற்றி வழக்கு பதிவு செய்து சட்டப்படி கொண்டு வந்து விடலாம் என்று சொன்னவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்!
ஓ! இறைவா! சிவனே! உமக்கு இப்பேர்பட்ட பெரிய கோயில் கட்டிய பேரரசன், தண்டமிழ் வேந்தன், சண்ட பராக்கிரமனை கொண்டு வரும் பெரும்பேற்றை வழங்கியுள்ளதாக எண்ணி பெரு உவகை அடைந்தேன்!
ஆய்வாளர் ஜோதி மகாலிங்கத்தை அழைத்து வழக்கு பதிவு செய்ய சொன்னேன்! 1932-ல் காணாமல் போன சிலைக்கு 2018-ல் வழக்கு பதிவு செய்தோம்.

பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்,அவர்களிடம் நம்பிக்கையோடு தெரிவித்தேன் ராஜ ராஜனை மீட்டு கொண்டு வந்து விடுவோம் என்று!

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ,வழக்கு சிலைத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சார் தலைமையிலான குழுவினர் சிரமேற்கொண்டு உரிய சட்டமுறைகளை பின்பற்றி DGP திரு டி.கே.ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாமன்னர் ராஜராஜன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகளை கொண்டு வந்து, இன்று கும்பகோணம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நீதிபதி பார்வைக்கு வைத்தோம்.
பிறகு லோகமாதேவி கட்டிய திருவையாறு ஐயாரப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு,

ஓங்கி உயர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலில், கோயிலைக் கட்டிய, கோயிலுக்கு உரிமைதாரரான உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரை கொண்டு வந்து ஆகம விதிகளின்படி வழிபாடு செய்து நிறுவினோம்.

மாமன்னருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இந்த அரிய நிகழ்விற்கு பேருதவியாய் இருந்த ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சார், ADSP ராஜாராம்,Adsp அதிகமாக குமார், DSP வெங்கட் ராமன் குடவாயில் பாலசுப்ரமணியம், பேரா. தெய்வநாயகம், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றி!!

தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்த காந்தளூர் சாலை கலமறுத்தருளி; செழியரை தேசு கொள் வீரனாய், சேர, பாண்டியரை வென்று, ஈழ மகிந்த பாலனை பணிய வைத்து, ஈழத்தை மும்முடி சோழ மண்டலமாக அறிவித்த நிகிரிலி சோழன் ராஜ ராஜன் சோழன் ஆவார்..

சிவனே மெய்சிலிர்க்கும் வகையில் கட்டிய பெருவுடையார் கோவிலையும், தமிழுக்கும் சைவத்திற்கும்
செயற்கரிய தொண்டு செய்த தன்னிகரில்லா தண்டமிழ் வேந்தன், சண்ட பராக்கிரமன் சிவபாதசேகரன்,உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரையும் வந்து தரிசிக்கும்படி, அனைத்து மக்களையும் அன்புடன் தஞ்சைக்கு அழைக்கிறோம்!!

மக்கள் நலனில், பாதுகாப்பில் என்றென்றும் தமிழக காவல் துறை!!..

நன்றி : தமிழக எழுத்தாளர்கள் குழுமம்