மூடி வேட்டை – சிரிப்புக்கதை

0
404

_____________________________________

நந்து சுந்து

_____________________________________

மிஸ்டர் எக்ஸ் மிகுந்த கடுப்பில் இருந்தார். அவரின் பேனா மூடியைக் காணவில்லை.

“என்னோட பேனா மூடியைப் பாத்தியா?” என்று கிச்சனைப் பார்த்து கத்தினார்.

“சும்மா இருங்க..நானே இட்லி வாணலி மூடியக் காணோம்னு தேடிகிட்டு இருக்கேன்” என்றார் எக்ஸெல்.

“பேனா மூடி கிடைக்கற வரைக்கும் நான் இட்லி சாப்பிட மாட்டேன்”

“போனா போகுதுன்னு விட்டா பேனா பேனான்னு பிணாத்தறீங்க ..என்ன ஆச்சு உங்களுக்கு?”

காலையில் குளித்து முடித்து சாமி முன் நின்று வீபூதி வைத்துக் கொண்டார். அதன் பின் ஸ்ரீ ராமஜெயம் எழுதினார். இப்போது பால் பாயிண்ட் பேனா மட்டும் இருக்கிறது. மூடி இல்லாமல் முடி துறந்து இருக்கிறது பேனா.

ஒரு தட்டில் நான்கு இட்லியைப் போட்டு அதன் மேல் சுடச்சுட சாம்பாரை ஊற்றி டைனிங் டேபிள் மேல் வைத்தார் எக்ஸெல். சோப் நுரை மாதிரி மேலே நெய். சாம்பாரில் கொத்துமல்லி தழைகள் வேறு வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

“இட்லியப் பாக்க மாட்டேன். நான் விஸ்வாமித்திரர் மாதிரி Pen க்காக penance பண்ணிகிட்டு இருக்கேன். நீ மேனகை மாதிரி மானாட மயிலாட பண்ணிகிட்டு இருக்காதே” என்று கண்களை மூடிக் கொண்டார் மிஸ்டர் எக்ஸ்.

“சரி..விடுங்க..இட்லியும் சாம்பாரும் வேலைக்காரிக்குக் கொடுத்துடறேன்”

“வேலைக்காரிக்கு ஒரு டி.எம்.சி சாம்பார் கூடக் கொடுக்கக் கூடாது..இதோ இப்போ வர்ரேன்” என்று தட்டு முன்னால் அமர்ந்தார்.

“இட்லி சாப்பிட்டுட்டு தேடறேன்” என்றார்.

சட்னியில் ஏதோ நறநறவென்றது.

“சட்னில தேங்கா மூடிக்கு பதிலா பேனா மூடிய போட்டுட்டியா?”

“இங்கே பாருங்க…ரகளை பண்ணாம இருந்தா தேடறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன். இல்லேன்னா தனியா தேடுங்க”

“சரி..சரி..ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கலாம். ஒரு scheme போட்டுடலாம்”

காலண்டரில் போய் ராசி பலன் பார்த்தார். அலைச்சல் என்று போட்டிருந்தது. அதை தொலைச்சல் என்று படித்தார்.

ஒரு பக்கத் தாடையை சொறிந்து கொண்டிருந்தார்.

“என்ன..ஒரே பக்கமா சொறியறீங்க..ball tampering பண்ற மாதிரி?”

பேனா மூடியை எங்கே போய்த் தேடுவது?

“எப்போப் பாத்தாலும் சோபாவுல உக்கார்ரீங்க இல்லே..சோபாவுல தேடிப் பாருங்க”

அவர் படிப்பது, படுப்பது எல்லாமே சோபாவில் தான். அவரின் தொடர் அமர்வால் சோபாவில் ஒரு பக்கம் க்ராணைட் எடுத்த மலை மாதிரி பெரிய குழியே விழுந்திருந்தது. சோபாவில் உட்காரும் இடத்திற்குப் பின்னே பத்மநாபசாமி கோவில் சுரங்கம் மாதிரி ஒரு மறைவிடம் இருக்கும் என்று அவருக்குத் தெரியும்.

சோபா இடுக்கில் கையை விட்டார். கை உள்ளே போய்க் கொண்டே இருந்தது. கீழ் வீட்டு சீலிங் ஃபேனே தட்டுப் படும் போல இருந்தது.

கையில் ஏதோ கிடைத்தது. முதலில் வெளியே வந்தது எக்ஸெல்லின் சீப்பு. சிபிச் சக்கரவர்த்தி காலத்து சீப்பு.

“ஹை..சீப்பு கிடைச்சுடுச்சா? இதைத் தான் பத்து வருஷமா தேடிகிட்டு இருக்கேன். ஏங்க அப்படியே இன்னும் கொஞ்சம் கைய விடுங்களேன். என்னோட கொண்டை ரிங் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்”

மறுபடியும் உள்ளே கையை விட்டார். நிஜமாகவே கொண்டை ரிங் கிடைத்தது. அந்த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸை கோபத்துடன் தூக்கி எறிந்தார்.

“உள்ளே வேற என்ன போட்டிருக்கே? நீலி ப்ருங்காதி தைலம் ஏதாவது கொட்டி வைச்சிருக்கியா?”

“நெய் ஸ்பூன் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன். எதுக்கும் பாத்துடுங்களேன்”

“நைநைன்னு அணத்தாதே. ஒவ்வொன்னா எடுக்கறேன். நீயும் உள்ளே கைய விடேன். நான் கஷ்டப்பட்டு குழில இறங்கிகிட்டு இருக்கேன். நீ அறம் பட நயந்தாரா மாதிரி கையக் கட்டிகிட்டு வேடிக்கை பாக்கறே?”

“இங்கே பாருங்க…உங்களால தான் எடுக்க முடியும். உங்களுக்குத் தான் கை நீளம்”

மிஸ்டர் எக்ஸ் மிகவும் ஆழமாகக் கையை விட்டார். கை இடுக்கில் மாட்டிக் கொண்டு விட்டது. எக்ஸெல்லால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இடுக்கில் மாட்டினால் நகுக என்று சிரித்துக் கொண்டிருந்தார்.

“கண்டதெல்லாம் கிடைக்குது. பேனா மூடி மட்டும் காணோமே?” என்றார் மிஸ்டர் எக்ஸ்.

“பத்து வருஷம் கழிச்சு கிடைக்கும். இப்போ போய் வேற வேலையப் பாருங்க”

“என்ன சொன்னே? என்னையும் மூடியையும் பத்து வருஷம் பிரிக்கப் பாக்கறியா? கல் தோன்றி மண் தோன்றா காலத்திலும் மூத்தது இந்த மூடி…நாங்க சேர்ந்து இருக்கறது உனக்குப் பிடிக்கல்லே…அழுக்காறு பிடித்த அழுக்கு ஆறே..கூவமே” என்று ஏதேதோ பிதற்றினார்.

“அப்போ சரி..நான் உள்ளே போகட்டுமா? தோசை மிளகாப் பொடி அடிக்கனும்”

“சரி..சரி..கூட இருந்து ஹெல்ப் பண்ணு..இது தான் கடைசி அட்டெம்ப்ட்” என்று மறுபடியும் கையை விட்டுத் துளாவினார். அவரின் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. அடடா… இங்கேயா ஒளிந்து கொண்டிருந்தது. இந்த அட்டை இல்லாமல் எவ்வளவு இருபது ரூபாய் டோக்கன்களை இழந்திருக்கிறார்.

பாக்கெட்டில் இருந்த தன் பேனாவை எடுத்துப் பார்த்தார். மூடி இல்லாமல் நின்று கொண்டிருந்தது. பல்பு இல்லாத கார்ப்பரேஷன் மின் கம்பம் மாதிரி மொட்டையாக நின்று கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் வேலைக்காரி வந்தாள்.

சுமை தாங்கி பட ஜெமினி கணேசன் மாதிரி மயக்கமா கலக்கமாவாக இருந்த மிஸ்டர் எக்ஸைப் பார்த்ததும் அவளுக்கே பரிதாபம் வந்தது.

“ஐயா..என்ன ஆச்சு?”

“பேனா மூடியக் காணோம்”

“ஐயா..விடுங்கய்யா..எவ்வளவு பேர் பேனாவே இல்லாம இருக்காங்க”

இந்த தத்துவம் அவருக்குப் பிடிக்கவில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடியாக இருந்தாலும் பேனாவுக்கு மேலே இருக்கும் மூடிதான் முக்கியம் என்று தோன்றியது.

“பேனா மூடியக் காணோம்..தேடிகிட்டு இருக்கோம்”

“அப்போ நான் வீடு கூட்டல்லே..கூட்டினா எங்கேயாவது ஓடிப் போயிடும். நீங்களே தேடி எடுத்துக்குங்க”

‘அடப்பாவி. வீடு கூட்டாமல் இருக்க இப்படி ஒரு சாக்கா? ஒரு வேளை இவளே மூடியை முந்தானை முடிச்சு செய்திருப்பாளோ?’

எக்ஸெல் வேகமாக ஓடி வந்தார்.

“அதெல்லாம் இல்லே.. நீ நல்லா கூட்டு. கட்டில் சோபா அடீல எல்லாம் துடப்பத்தை விட்டு அலசிப் பாரு” என்றார்.

வேலைக்காரிக்கு எரிச்சல் வந்தது. கண்ணில் தெரியும் காட்சிகளை மட்டுமே கூட்டுவது அவள் கடமையாக இருந்தது. இப்போது மறைந்திருந்து பெருக்கும் மர்மம் சேர்ந்ததும் எரிச்சல் வந்தது.

“சரிம்மா” என்று துடப்பத்தை கோபமாக தரையில் தட்டினாள்.

வேலைக்காரி கூட்டும் போது பின்னாலேயே போனார் மிஸ்டர் எக்ஸ்.

“ஏன் அவ பின்னாலேயே போறீங்க”

“அது வந்து pen cover”

“நீங்க எந்த பெண்ணையும் கவர் பண்ண வேணாம்”

கட்டிலுக்கடியில் எக்ஸெல்லின் ஸ்டிக்கர் பொட்டுக்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன.

“ஏங்க…இதெல்லாம் நதியா பொட்டுங்க…தேடித் தேடி வாங்கினேன் அந்த காலத்துல”

கொஞ்சம் crayon pencil கிடைத்தன. அப்படியே கொஞ்சம் கரையானும்.

ஆனால் பேனா மூடி மட்டும் அகப்படவில்லை.

எக்ஸெல்லுக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப் பேசினார்.

“ம்ம்ம்.. நான் நல்லாத் தான் இருக்கேன்..அவர் தான் காத்தாலேந்து நல்லா இல்லே… பேனா மூடியக் காணோமாம். என்னைப் படுத்தறார். சரி..சரீ..செய்யச் சொல்றேன்”

“யார் அது போன்ல?”

“என்னோட அத்தை. அவங்க வீட்ல இப்படித்தான் குக்கர் வெயிட் காணாமப் போயிருந்ததாம். சாமி கிட்ட வேண்டிகிட்டா கிடைச்சிடுமாம்”

“என்ன வேண்டிக்கனுமாம்?”

“ராமேஸ்வரத்துக்கு பாத யாத்திரையா வர்ரேன்னு வேண்டிக்கனுமாம்”

ராமேஸ்வரத்துக்கு பாத யாத்திரையா? அடி பாதகி என்று மனதிற்குள் திட்டினார்.

காலிங் பெல் அடித்தது. போய்த் திறந்தால் கீழ் வீட்டுப் பையன். வலது உள்ளங்கையை மூடி வைத்திருந்தான். உள்ளே ஏதோ இருக்கிறது. நீலக் கலரில் தெரிந்தது

“அங்கிள்..அங்கிள்..உங்க வீட்டு பால்கனிலேந்து இது எங்க வீட்ல விழுந்துடுச்சு. அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க”

மிஸ்டர் எக்ஸின் காதில் இன்பப் பேனாறு பொழிந்தது.

“கொஞ்சம் இருடா” என்று ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் எடுத்து அவனிடம் கொடுத்தார்.

“ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்” என்று கூறியவன் உள்ளங்கையை திறந்தான். நீலக் கலர் துணிக் காயப் போடும் ப்ளாஸ்டிக் க்ளிப்பைக் கொடுத்தான்.

க்ளிப்பா? இதற்கா ஒரு ஃபைவ் ஸ்டார்?

“டேய்..அந்த சாக்லெட்டைத் திருப்பிக் கொடு. க்ளிப்புக்கு எல்லாம் ஃபைவ் ஸ்டார் கொடுக்கறதுக்கு bye law ல இடம் இல்லே”

மாலை. வாக்கிங் கிளம்பினார். குழப்பத்தில் இருந்தார்.

ஒரு ஸ்கூட்டர் மேல் மோதப் போனார். “என்னய்யா? டாப் கழண்டிடுச்சா?” என்றான் ஸ்கூட்டர் ஆசாமி.

‘மூடி கிட்டுப் போய்யா’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.

போகும் வழியில் இரண்டு பெரிசுகள் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். “இனிமே அவ்வளவு தான். மோடி பூட்ட கேசு தான்..மறந்துட வேண்டியது தான்…மோடிக்கு சான்ஸே இல்லே”

அவர்கள் மோடி என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவர் காதில் மூடி என்று விழுந்தது.

பக்கத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை இருந்தது. போனார்.

“சார். பேனா..” என்று தயங்கினார்.

“பார்க்கர் பேனாவா?”

“இல்லே”

“மார்க்கர் பேனாவா?”

“இல்லே”

“ஜெல்லா? இல்லே சாதாவா?”

“இல்லே..மூடி மட்டும் கிடைக்குமா?”

கடைக்காரர் மூறைத்தார்.

“இல்லே..பேனா மூடி தொலைஞ்சி போயிடுச்சு…டில்லில போராடற விவசாயிங்க மாதிரி பேனா அரை நிர்வாணமா நிக்குது”

“நீங்க..பழைய பேப்பர் கடைல போய் கேட்டீங்கன்னா கிடைக்கும்”

தன்னுடைய பேனாவுக்கு ஏதோ ஒரு செகண்ட் ஹேண்ட் மூடியா? அவ்வளவு தேர்ட் ரேட் ஆகிவிடவில்லையே நாம்.

இனிமேல் பேனாவைப் பற்றியே நினைக்கக் கூடாது என்று முடிவெடுத்தார். ஒரு ஆள் அவர் அருகில் வந்தான்.

“சார். பேனாக் கத்தி வேணுமா? அம்பது ரூபா தான்”

“போய்யா” என்று கத்தினார்.

இரவு தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுத்தார். கெட்ட கெட்ட கனவுகளாக வந்தன.

“அவள் பறந்து போனாளே..என்னை மறந்து போனாளே..” என்று பேனாவின் அடிப் பகுதி பாடிக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை. சுரத்தில்லாமல் எழுந்தார். குளித்து முடித்து விட்டு சாமி முன்னால் நின்று வீபூதி எடுக்க டப்பாவுக்குள் கையை விட்டார். கையில் ஏதோ தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் பேனா மூடி.

‘ஆஹா..இறைவா என்னே உன் திருவிளையாடல். தூணிலும் இருப்பான். வீபூதி டப்பாவிலும் இருப்பான் என்று நிரூபித்து விட்டாயே” என்று புளகாங்கிதம் அடைந்தார்.

மூடியை எடுத்து பேனா மேல் பொருத்தினார். சாப விமோசனம் கிடைத்து பேனாவுக்கு முழு உருவம் வந்தது.

எக்ஸெல்லிடம் ஓடினார். “இங்கே பாத்தியா..பேனா மூடி கிடைச்சிடுச்சு. பாக்கறதுக்கே எவ்வளவு அம்சமா இருக்கு பாரு” என்று பேனாவுக்கு முத்தம் கொடுத்தார்.

நோட் புத்தகத்தை எடுத்தார். ஸ்ரீராமஜெயம் எழுத ஆரம்பித்தார். ஸ்ரீராம… என்று எழுதியவுடன் பேனா எழுத மறுத்தது. எழுத்தாணி மாதிரி பேப்பரில் உழுதது.

பேனாவைக் கழட்டி ரீபில்லைப் பார்த்தார். ரீபில் சுத்தமாகக் காலியாகியிருந்தது.

‘கெக்கெக்கே’ என்று சத்தம் கேட்டது. பேனா மூடி தான் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

_______The End