மாணவன் மனநிலை

0
241

திருப்பூரில் பள்ளி மாணவன் ஒருவன் தலைமுடியை ஸ்டெய்லாக வெட்டியதால் அவனது தந்தை அவனை அழைத்துக்கொண்டு மீண்டும் முடி திருத்தும் கடைக்கு சென்று முடியை ஒழுங்காக வெட்டிவிட சொல்லியிருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் இரு நாட்களுக்கு முன்னர்..

இப்போது உள்ள மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது பாருங்கள்..

முதலில் அந்த தந்தைக்கு..

பொண்ணுங்க முன்னால் ஆசிரியர்கள் எங்களை அடித்தபோது அப்படியே ஊதிவிட்டுகிட்டு நாங்க பாட்டுக்கு போய்கிட்டே இருந்தோம்..

ஆனால் இப்போதுள்ள வாலிப பிள்ளைகளை வீட்டில் வைத்து அடித்தாலே அந்த பிள்ளைகளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.. அதை பெரிய அவமானமாக கருதுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் இப்போது இருக்கும் பிள்ளைகளால் அதை ஈசியாக கடந்துபோகவோ, எடுத்துகொள்ளவோ முடியாது என்று பெற்றோர்களாகிய உங்களுக்கு ஏன் தெரியவில்லை..

தனது ஆடை எவ்வாறு ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.. மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும்.. எவ்வாறு தலை முடியை வெட்டியிருக்க வேண்டும்.. யார் யாருடன் எந்த எல்லையுடன் பேச வேண்டும் என எதையும் பக்குவமாக குழந்தை பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுத்திருந்தால்.. அவர்கள் வாலிப வயதிலும் மற்ற பிள்ளைகள் ஒரு சிலரை பார்த்து அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும்.. ச்சே ச்சே இப்படி இருந்தால் நம் அப்பாவிற்கு பிடிக்காது என நினைத்துக்கொண்டு ஈசியாக கடந்துபோய் விடுவார்கள்..

பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஆண் பிள்ளைகளுக்கும் அவர்கள் அப்பாக்கள் தான் ரோல் மாடல்.. அப்பாக்கள்தான் ஹீரோ.. பெரும்பாலும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் நற்பண்புகளை விட நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதைதான் அவர்கள் கற்றுகொள்கிறார்கள்.

முன்மாதரியாக வாழ்வதன் மூலம் குழந்தை பருவத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்காமல் வாலிப வயதில் அவர்களை அடக்கும் விதத்திலோ, அதிரடியாகவோ ஏதாவது செய்ய நேரிட்டால் அது விபரீதமாகத்தான் போய் முடியும்.

தனது ஆசைப்படி ஸ்டெய்லாக முடி வெட்டி வந்தவனிடம் அவனது தந்தை பக்குவமாக எடுத்து கூறியிருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு அவனை அந்த முடி திருத்தும் கடைக்கே அவனது தந்தை அழைத்துசென்றது அவனுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை பிள்ளையை பெற்ற பெற்றோர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை..

அந்த முடிதிருத்தும் கடைக்காரர் அவனை எப்படி பார்த்திருப்பார்.. இது அவனது நண்பர்களுக்கு தெரிந்தால் அவர்கள் அவனை கிண்டல் பண்ண மாட்டார்களா.. அதை அந்த மாணவனால் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாதே.. இதை ஏன் அந்த தந்தை உணரவில்லை..

வாலிப பிள்ளைகளிடம் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடக்கக்கூடாது.. நமது காலம் வேறு.. இப்போதுள்ள நமது பிள்ளைகள் காலம் வேறு..

இப்போதுள்ள மாணவர்களால் எதையும் எளிதில் எடுத்துக்கொள்ளும், தாங்கிக்கொள்ளும் பக்குவம் கொஞ்சம்கூட இல்லவேயில்லை.. ஏதாவது ஒன்று என்றால் உடனே அவர்களுக்கு தற்கொலைதான் தெரிகிறது.. இந்த சமூகமும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளை அப்படிதான் வளர்த்துகொண்டிருக்கிறார்கள்..

எத்தனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு தோல்வி அவமானம் அல்ல. தோல்விதான் நமக்கு நிறைய கற்றுகொடுக்கிறது. தோல்வியில் கிடைக்கும் அனுபவம் என்ற அஸ்திவாரம் இல்லாமல் உங்களால் சிறந்த ஒரு வாழ்க்கை வாழ முடியாது என கற்றுகொடுக்கிறார்கள்..

வெற்றி பெறுவதுதான் மானம், வீரம், அறிவாளிகள் எனவும்.. தோல்வி என்பது அவமானம், முட்டாள்கள் எனவும் தானே எதற்கொடுத்தாலும் கூறுகிறார்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையை மெருகேற்ற தோல்வியைவிட சிறந்த ஒன்று இருக்கா.. இதை ஏன் இன்னும் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்..

அடுத்தது அந்த மாணவனுக்கு…

ஏன்டா பயலே.. உன் அப்பாதானடா உன்னை அவமானப்படுத்தினார்.. உனக்காக அவர் எவ்வளவோ அவமானப்பட்டிருப்பாரே.. இந்த ஒரு முறை அவர் உன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாதாடா உன்னால்.. நீ மற்றவர்கள் முன்னால் அவமானப்படக்கூடாது என்பதற்காகத்தானடா அவர் அவ்வாறு நடத்துகொண்டார்..

என்ன சார்.. உங்க பையன் இப்படி முடி வெட்டியிருக்கான் என அவரிடம் யாராவது கூறினால் தனது பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லையோ.. மற்றவர்கள் குறைகூறும் அளவிற்கு பிள்ளையை வளர்த்துவிட்டோமோ என அவர்தானடா வேதனைபடுவார்.. இதை ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை..

தற்கொலை என்பது பிரச்னைக்கு தீர்வு அல்ல.. அது பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் குறுக்கு வழி என்பது ஏன் உனக்கு தெரியவில்லை.. பிரச்னைக்கு தீர்வுகாண முயலாமல், பிரச்னையில் இருந்து தப்பிக்க ஏன்டா உனக்கு மனம் வந்தது..

டேய் தம்பி.. உனக்கு ஏற்பட்ட அதே நிகழ்வு.. ஏன் அதைவிட கொடுமையான நிகழ்வு நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஏற்பட்டதேடா..

நீ தற்கொலை செய்துகொண்டதுபோல நானும் முடிவெடுத்திருந்தால் நான் செத்து இதோடு 13 ஆண்டுகள் ஆகியிருக்குமே.. எனக்கு இல்லாத அவமானம் உனக்கு மட்டும் எப்படிடா வந்தது..

கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள புனித வளனார் மேனிலைப்பள்ளியில் (st.joseph’s higher secondary school) விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது வாரந்தோறும் வருவதுபோல அந்த வாரமும் முடி திருத்துபவர்கள் விடுதிக்கு வந்து முடி திருத்திக்கொண்டிருந்தார்கள்..

முடி யார் யார் தலையில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு வார்டன்கள் டோக்கன் தருவார்கள்.. அந்த டோக்கனை கொடுத்து நாம் முடி விட்டிக்கொள்ள வேண்டும்..

ஸ்டெடி ஹாலில் படித்துக்கொண்டிருந்த எனக்கும் டோக்கன் தந்தார் விருத்தாசலம் அருகில் உள்ள அரசகுழி என்ற கிராமத்தை சேர்ந்த அந்த வார்டன்.

எனக்கு முடி வெட்டிக்க பிடிக்கவில்லை.. தலையில் முடி அதிகமாக இருப்பதுதான் பிடிக்கும் என்பதால், எனக்கு கொடுத்த டோக்கனை வேறு ஒருவனிடம் கொடுத்துவிட்டு டைனிங் ஹாலுக்கு பின்புறம் இருக்கும் சுவரில் ஏறிக்குதித்து வழக்கம்போல அருகில் உள்ள வளனார் கல்லூரி ஃபேஸ்கட் பால் கிரவுண்டில் ஃபேஸ்கட் பால் விளையாட சென்றுவிட்டேன்..

விளையாட்டு நேரம் முடிந்ததும் அனைவரும் குளித்துவிட்டு ஸ்டெடி ஹாலில் படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு முடி திருத்துவதற்கான டோக்கன் கொடுத்த வார்டன் என் தலையை பார்த்ததும்.. உனக்குதான் டோக்கன் கொடுத்தேனே நீ ஏன் முடி வெட்டிக்கவில்லை என்று என்னிடம் கேட்டார்.

அதற்கு நானோ.. நான் முடி வெட்டிக்க போனேன்.. கூட்டமா இருந்ததும் விளையாட போயிட்டேன் எனக் கூறினேன்.. ( ஆனால் நான் வேணும்னே தான் முடி வெட்டிக்காமல் போனேன்)

உடனே அந்த வார்டன்.. கூட்டமா இருந்தா சாரால வெய்ட் பண்ணி முடி வெட்டிக்க முடியாதோ.. என கூறிவிட்டு, புறப்பட்டுக்கொண்டிருந்த முடி திருத்தும் அந்த அண்ணனிடம் என்னை கூப்பிட்டுக்கொண்டு போனார்கள் இரு வார்டன்கள் மற்றும் விடுதி ஃபாதர் ஆகிய மூன்று பேரும்..

அப்போது அந்த முடி திருத்தும் அண்ணன் சீப்பை என் தலையில் வைத்து முடி வெட்டும்போது அருகில் நின்றுகொண்டிருந்த அந்த அரசகுழி கிராமத்தை சேர்ந்த வார்டன் சொன்னார்.. இவனுக்கு சீப்பை வைத்துலாம் வெட்ட வேணாம்.. அப்படியே கையால் பிடித்து பிடித்து வெட்டுங்க என்று..

அதற்கு அந்த அண்ணனும் அவ்வாறு வெட்ட எனக்கு செமகோபம்.. அவமானம் வேறு..

அடுத்தநாள் பள்ளிக்கு சென்றபோது கடலூர் ஓட்டியில் இருந்து வரும் எனது நண்பன் சுஜித்திடம் முதல்நாள் நடந்ததை சொல்லி எனது கண்ணிற்கு மேலிருந்து நேராக காதிற்கு மேல் வந்து அப்படியே பின்பக்க கழுத்துவரை “L” ஷேப்பில் கோடு போடுடா என்றேன்.. அவன் ரேசரால் ஒரு பத்து சென்டிமீட்டருக்கு தலையின் இரு பக்கமும் ரோடே போட்டுவிட்டான்..

இது வார்டன்கள் மற்றும் விடுதி ஃபாதருக்கு தெரிந்ததும் உடனே அவர்கள் வெளியில் முடிதிருத்தும் கடையில் இருந்த அந்த அண்ணனை வர சொல்லிவிட்டார்கள்.. பள்ளியில் இருந்த என்னையும் வரவழைத்துவிட்டார்கள்.

கேண்டின் வளனார் கல்லூரி மெயின் கேட்டிற்கு அருகில் மட்டுமே இருப்பதால் பள்ளி கல்லூரியில் உள்ள எல்லோரும் அங்குதான் சொல்வார்கள். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் விடுதி வழியாக கேண்டினுக்கு போய்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.. ஒரு சில மாணவர்களும்கூட..

என்னை வார்டன் ரூமிற்கு முன்னால் வராண்டாவில் கீழே உட்காரவைத்து பொதுவெளியில் முடி வெட்டிக்கொண்டிருப்பதை அந்த வழியாக போகிற ஆசிரியர்கள் மாணவர்கள் பார்த்துக்கொண்டே போகிறார்கள். அப்போது எனக்கும் அவமானமாகத்தான்டா தம்பி இருந்தது.. நான் சாகவில்லைடா..

இது நடந்து ஒருநாள் கழித்து இது எப்படியோ பிரின்சிபல் ஃபாதராக இருந்த அருள்தாசிற்கு தெரிந்துவிட்டது. யாரு போட்டுகொடுத்ததோ, அல்லது அவரே பார்த்தாரோ தெரியவில்லை..

ஸ்டெடி ஹாலுக்கு அன்று இரவு பிரின்சிபல் ஃபாதர் அருள்தாஸ் வந்து ஒரு ரவுண்டு சென்றுவிட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில் வார்டன் ஒருவர் ஓடிவந்து என்னை அழைத்ததும் ஏதோ நடக்க போகிறது என எனக்குத் தெரிந்துவிட்டது..

அவர் நேராக வார்டன் ரூமிற்கு என்னை அழைத்துச்சென்றார்.. அங்கு பிரின்சிபல் ஃபாதர் அருள்தாஸ் கொலை வெறியில் பிரம்போடு நின்றுகொண்டுக்கிறார்..

என்னை ரூமிற்கு உள்ளே வரசொல்லி கதவை சாத்திகிட்டு பிரம்பால் அடித்தாரே பாருங்க.. ஒங்க வீட்டு அடியா எங்க வீட்டு அடியா.. செம அடி.. வெளுத்து வாங்கிட்டாரு..

அவரு குள்ளமா வேற இருப்பாரா.. துள்ளி துள்ளிஅங்கி சட்டை கையை இழுத்து இழுத்து விட்டு என்னை அடிக்கிறார்.. ஸ்டெயில் ஸ்டெயிலா.. முடி.. முடி.. னு சொல்றாரு.. சும்மாவே திக்குவாறு.. இதுல வேற கோவத்துல அவருக்கு முழுசா வாயில வார்த்தையே வரல..

மரண அடி.. ஏன்டா தலையில ரோடு போட்டன்.. இந்த மாதரி ரூம் உள்ள விட்டு கொல்றானுங்களேனு ஆகிடுச்சி எனக்கு..

ஆனா ஒன்னு எவ்ளோ அடிச்சாலும் பல்லை கடித்துகிட்டு அப்படியேதான் நின்னுகிட்டு இருந்தேன்.. கொஞ்சம்கூட கத்தவோ., உடம்பை அங்கும் இங்கும் அசைக்கவோ வளைக்கவோ நெலியவோ இல்லை.. இந்த கிழசுக்கே இவ்ளோ வெறி இருந்தா நமக்கு எவ்ளோ வெறி இருக்கும் என கையை இருக்கமா மூடிகிட்டு பல்லை கடிச்சிகிட்டு அப்படியே நின்னேன்..

அப்போது ஒன்னே ஒன்னுதான் மனசுல நினைத்தேன்.. நீ என்ன ஊரு.. உங்க அப்பா பேரு என்னன்னு மட்டும் பிரின்சிபல் என்னிடம் கேட்டுவிடக்கூடாது என்று.. காரணம் அப்பாவும் பிரின்சிபல் ஃபாதரும் இளம் பருவத்திலே நண்பர்கள். அப்பா பேரு கெட்டுவிடக்கூடாது என நினைத்தேன்.

ஏன்டா தம்பி.. ஸ்டெய்லா முடி வெட்டுனதால என்னை விடவா நீ அதிகமா அவமானப்பட்டுட்ட.. என்னைவிடவா நீ அதிகமா அடி வாங்கிட்ட.. எனக்கு வராத தற்கொலை எண்ணம் உனக்கு மட்டும் எங்கிருந்துடா வந்தது..

இப்போது ஸ்டெய்லாக முடி வெட்டிக்கொள்பவர்களை பார்க்கும்போது எனக்கு உடம்பு சிலுக்குது.. அருவெறுப்பா இருக்குது.. ச்சே என்னடா இப்படி கன்ராவியா முடி வெட்டியிருக்காணுங்க என்று தோணுது.. அப்படியே மாறிவிட்டது எனது எண்ணம்..

வாலிப வயதின் ஆரம்பத்தில் எல்லோருக்கும் அப்படிதான் ஆசை வரும்.. அதை பண்ணணும், இதை பண்ணணும், அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் என்று..
அது அவர்களின் தவறு அல்ல அந்த வயசின் கோளாறு.. அந்த வயசில் அப்படிதான் செய்யத் தோன்றும்..

ஆண் மீது பெண்ணிற்கும், பெண் மீது ஆணிற்கும் எப்படி ஈர்ப்பு வருவது இயல்போ.. அதேபோல 13 வயது முதல் 22 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு இவ்வாறு ஏடாக்கூடமாக எழுவது இயல்பு.. அதை பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான் பக்குவமாக எடுத்துசொல்லி புரியவைக்க வேண்டும்..

ஆசிரியர்களும், பெற்றோர்களும் சரியான முறையில் மாணவ செல்வங்களுக்கு புரியவைக்காததே, மாணவர்களை சரியான முறையில் கையாளாததே மாணவர்கள் இது போல தற்கொலை செய்துகொள்ள காரணம்..

அன்புடன் ம.ரெக்ஸ்.[/vc_column_text][/vc_column][/vc_row]