பம்பராசுரன் – சிரிப்புக் கதை | நந்து சுந்து

0
289

பம்பர சீசன் ஓடிக் கொண்டிருந்தது. தெருவில் யாரோ ஒரு பையன் பம்பர சீசனை அறிவித்து விட்டான். அடுத்து குச்சி விளையாட்டு வரும் வரை பம்பரம் நின்று ஆடும்.

காலை எட்டு மணி. இப்போதே இரண்டு பயல்கள் பம்பரத்திற்கு சாட்டை கயிறை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

பத்து மணி சுமாருக்கு பம்பரப் பிரியர்களின் கூட்டம் அதிகமாகும். பொதுவாக எங்கள் க்ரூப்பில் அம்மாஞ்சிகள் தான் அதிகம் இருப்பார்கள். ஆனால் பம்பர விளையாட்டு விளையாட மட்டும் கருவேல கணவாய் வழியாக சில முரட்டுப்பயல்கள் நுழைந்து விடுவார்கள். பால்ய வயது பி.எஸ். வீரப்பா மாதிரி இருப்பார்கள்.

இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சூரி என்று ஒரு பையன் வருவான். அசுரன் மாதிரி இருப்பான். தினமும் எதிராளிகளின் ஒரு பம்பரத்தையாவது உடைத்து விட்டு கர்ஜிப்பான்.

தோற்றுப் போய் நம் பம்பரம் அவனிடம் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். நம் பம்பரத்தின் மண்டையில் போர் வெல் போடுவதற்கு தன் பம்பரத்தை எடுப்பான். கண்களில் ஒரு நெருப்பு தெரியும்.

பம்பரக்கண்ணாலே காய்ச்சல் சங்கதி சொல்லிக் கொண்டிருப்பான்.

சூரி விளையாடுகிறான் என்று அபேஸ் ஆகவும் முடியாது. தப்பித்துப் போனால் சாட்டைக் கயிறால் முழங்காலில் அடிப்பான்.

“டேய்..தோத்தாங்குளி…போடா..போய் வேணுகோபால் கூட கிரிக்கெட் ஆடு..” என்பான்.

மகாபாரதத்தில் தர்மரை சூதாட்டத்துக்கு அழைத்து சகுனி டீஸ் செய்வது மாதிரி செய்வான். தர்மத்துக்கு கட்டுப்பட்டு நானும் சரியென்பேன். தர்மம் தலை காக்குமே தவிர பம்பரம் காக்காது என்று அப்போது எனக்கு புரியவில்லை.

காளகேயப் பயல்களின் பம்பரம் எல்லாம் கொழுத்துப் போய் சட்டி மாதிரி பெரிதாக இருக்கும். என் பம்பரம் மட்டும் பப்பு மம்மு சாப்பிட்ட மாதிரி சின்னதாக ஒரு கொழுக்கட்டை சைஸுக்கு இருக்கும்.

கடைக்குப் போய் பம்பரம் வாங்குவது ஒரு கலை.

பக்கத்தில் ஒரு மளிகைக் கடையில் பம்பரம் விற்பார்கள். ஒரு மர டப்பாவில் வெங்காயம் மாதிரி பம்பரம் கொட்டி வைத்திருப்பார்கள். நாமே போய் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.

சில Grand slam பட்டம் பெற்ற பயல்கள் பம்பரத்தை எடுத்துப் பார்த்து சோதிப்பார்கள். முக்காலமும் அறிந்த முக்காபுலா மாதிரி பம்பரத்தை பார்ப்பார்கள். பிறகு ஒரு பம்பரத்தை short list செய்வார்கள்.

எனக்கு இந்த scanning சமாச்சாரம் எல்லாம் தெரியாது. பம்பரத்தின் மேலே மூன்று கலரில் வட்டமாக சாயம் பூசியிருப்பார்கள். எனக்கு ஊதாக்கலர் பிடிக்கும். எனவே ஊதாக்கலர் பூசிய பம்பரத்தை வாங்குவேன். அந்த பம்பரம் ஒரே நாளில் ஊத்திக் கொள்வதெல்லாம் வேறு கதை.

பம்பரம் முன்னால் ஒரு இடைக்கால ஆணி இருக்கும். குண்டூசி மாதிரி சிறியதாக. அது பம்பரத்துடன் வரும் ஒரு சம்பிராதய வேஸ்ட். அதனால் ஒரு பயனும் இல்லை. பெண்களுக்கு வைத்துக் கொடுக்கும் ரவிக்கைதுணி மாதிரி தான் அது.

அந்த ஆணியைப் பிடுங்கிவிட்டு டோனி மாதிரி ஒரு ஸ்டெடியான ஆணி அடிக்க வேண்டும். ஆணியைப் பிடுங்குவது ஒரு சுலபமான வேலை. (நல்ல வேளை. ஆணியே புடுங்க வேணாம் என்ற டயலாக் அப்போது வந்திருக்கவில்லை)

வாசல் கதவு இடுக்கில் அந்த சோனி ஆணியை சொருகி கதவை மூடிவிட்டு பம்பரத்தை பிடித்து திருகினால் பம்பரத்துக்கு பிரிவினை கிடைத்து விடும். கதவிலும் மர சட்டத்திலும் தான் சிறிய ஓட்டை விழுந்திருக்கும். இந்த சட்டத்தின் ஓட்டைகளை அப்போதெல்லாம் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அடுத்து பம்பரத்தில் புது ஆணியை இறக்க வேண்டும். எனக்கு இந்த தொழில் நுட்பமும் சரியாக வராது. அந்த அசுரப்பயல்கள் மட்டும் மாடு சாணி போடுவது போல சுலபமாக ஆணி அடித்துவிட்டுப் போய் விடுவார்கள்.

கதிர் என்று ஒரு பம்பர பயில்வான் இருந்தான். அவனிடம் ஒரு nominal fees கொடுத்து ஆணி அடித்துக் கொண்டு விடுவேன். என்னால் அவனும் வளர்மதியாக வளர்ந்தான்.

என் கையில் புது பம்பரம் இருக்கிறது. சூரியின் அழைப்பை ஏற்று அஸ்தினாபுரத்தில் ஆட்டம் ஆரம்பிக்கப்போகிறது. முதலில் அபீட் எடுக்க வேண்டும். அபீட் எனப்படுவது யாதெனில் பம்பரத்தை சுற்ற விட்டு சாட்டையினால் மேலே தூக்கி கையினால் பிடித்தல்.

படிப்பதற்கு இது சுலபமாக தெரிந்தாலும் project launching செய்யும் போது பல சிக்கல்கள் வரும். சாட்டைக்கயிற்றை சுத்தும் போது டோபா கழண்டு போய் பருப்புத் தேங்காய் கூடு மாதிரி கையோடு வரும்.

இந்த பம்பர கிங்கரர்கள் அதற்குள் சாட்டையை மூன்றே மூன்று சுற்று சுற்றி பம்பரத்தை விடுவார்கள். பம்பரம் First gear ல் சுற்றும். அது குடை சாய்வதற்குள் மின்னல் வேகத்தில் அபீட் எடுத்து விடுவார்கள்.

நான் அப்போது தான் சாவகாசமாக எச்சு பாட்டி முறுக்கு சுத்துவது போல சாட்டையை சுற்றிக் கொண்டிருப்பேன். அப்படியே வேகமாக சுற்றி விட்டாலும் பம்பரத்தை விட்டால் ஆணியில் சுற்றாமல் பக்க வாட்டில் சீறிப் பாய்ந்து சாக்கடையை நோக்கி ஓடும்.

ஆக மொத்தம் அபீட் எடுப்பதில் நான் அவுட்.

எனக்கு கம்பெனி கொடுக்க சில பயல்கள் இருப்பார்கள். ஆக மொத்தம் என் மாதிரி பச்சாக்கள் பம்பரத்தை எல்லாம் வட்டத்துக்குள் கட்டி வைப்பார்கள்.
.
பம்பரம் விடுவதில் இரண்டு வகை உண்டு.

ஒன்று குத்து. இது பம்பரத்தில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர்களுக்கே சாத்தியப்படும். இதில் பம்பரத்தை தரையில் ஓங்கி அடிப்பார்கள். பம்பரம் அப்படியே எகிறி குதித்து Hip Hop செய்யும். ஜிவ்வென்று சுற்றும். பம்பரம் செத்துப் போக எப்படியும் இரண்டு நிமிடமாவது ஆகும்.

இந்த ஏவுகணை எதிராளி பம்பரங்களை நாசம் செய்வதற்கும், வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை கலைப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும்.

இன்னொன்று சவுக்கு முறை. இது ஒரு சாத்வீகமான முறை. மெதுவாக விடுவார்கள். பம்பரம் பூ மாதிரி சுத்தும். இது அபீட் எடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப் படும். இது நுனி இலை பாயசம் மாதிரி.

துரதிர்ஷ்டவசமாக நான் இந்த நுனி இலை பாயசத்தை தாண்டி உள்ளே போனதே இல்லை.

இந்த பம்பர விளையாட்டில் நிறைய ப்ளேயிங் கண்டிஷன்கள் உண்டு. குத்து விடும் பையனின் பம்பரம் உள்ளே இருக்கும் பம்பரத்தை ஒரு முறையாவது டச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவன் பம்பரத்தையும் கட்டி வைத்து விடுவார்கள்.

இதில் ஒரே ஒரு relief உண்டு. பம்பரம் சுற்றாமல் மொட்டை அடித்தாலும் சரி. எதிரி பம்பரத்தை தொட்டு விட்டால் போதும். எனவே நான் பெரும்பாலும் இந்த மொட்டை ரூட்டையே தேர்ந்தெடுப்பது வழக்கம். மொட்டைக்கு வேண்டிக் கொண்டு சாட்டையை சுற்றி ஓங்கி ஒரு அடி. நூற்றுக்கு பத்து முறை அது target ஐ அடித்து விடும். மீதி நேரம் மாட்டிக் கொள்வேன். கடைசி சீனில் ஹீரோ தங்கச்சியை கம்பத்தில் கட்டி வைப்பது போல என் பம்பரத்தை கட்டி வைத்து விடுவார்கள்.

சில பயல்கள் குறி பார்த்து குத்து விடுவார்கள். நம் பம்பரத்தின் மண்டையில் ஆணி இறங்கும். சத்தம் நம் செவியை எட்டும். ஒரு பெரிய எரிகல் பூமியில் விழுந்த மாதிரி ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கும். அதை பம்பர டிக்‌ஷனரியில் ஆக்கர் என்று கூறுவார்கள். நம் பம்பரத்தில் ஆக்கர் செய்த பயல் நம் பம்பரத்தை தஞ்சாவூர் கல்வெட்டு மாதிரி ஆராய்ச்சி செய்து விட்டுப் போவான்.

வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தை டச் செய்ய இன்னொரு வழி முறையும் உண்டு. சுற்றுகின்ற பம்பரத்தை நம் உள்ளங்கையில் ஏற்றிக் கொள்வது. மோதிர விரல் நடு விரல் கேப்பில் பம்பரத்தை உள்ளங்கையில் ஏற்றுவார்கள். ஒரு கோழிக்குஞ்சு மாதிரி அது கையில் நிற்கும்.

வட்டத்துக்குள் இருக்கும் பம்பரம் மேல் உள்ளங்கை பம்பரத்தை விடுவார்கள். அது டவுன் பஸ்ஸில் இடிப்பது மாதிரி லேசாக இடிக்கும். ஆனால் இந்த இடத்தில் இடித்தவன் எஸ்கேப் ஆகி விடுவான். இடிக்காதவன் மாட்டிக் கொள்வான்.

சிலர் காற்றிலேயே பம்பரத்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்து அப்படியே உள்ளங்கையில் சுற்ற வைப்பார்கள். பம்பரம் தரையை தொடவே தொடாது.

இது மாதிரி பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்த்திரம் எல்லாம் ஒரு சில பம்பராச்சாரியார்களே செய்வார்கள். நமக்கு ஒரு அஸ்திரமும் தெரியாது. வஸ்திரம் தான் கழண்டு போகும்.

கடைசியில் சூரி வருவான். இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஒரு குத்து விடுவான். வட்டத்துக்குள் இருக்கும் அத்தனை பம்பரங்களும் சிதறி ஓடியிருக்கும். என் பம்பரம் மட்டும் பதினோரவது பேட்ஸ்மேன் மாதிரி தனியாக வட்டத்துக்குள் நிற்கும்.

மறுபடியும் காலைத் தூக்கி ஒரு நடனம் ஆடுவான். என் பம்பரத்தைத் தாக்குவான். ஷண்டிங் செய்யும் கூட்ஸ் ரயில் மாதிரி கடமுடவென்று பெரிய சத்தம் கேட்கும்.

அஸ்தினாபுர சபையில் அழக்கூடாது. என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் போது சரியாக பக்கத்து வீட்டு ரங்கராஜன் வருவான்.

“டேய்..உன்னை அம்மா கூப்பிடறாங்க…அர்ஜண்டா ஏதோ கடைக்குப் போகனுமாம்”

அவ்வளவு தான். நான் பம்பரத்துடன் ஒரே ஓட்டம்.

கொஞ்ச நேரத்தில் ரங்கராஜன் பாய் பொட்டிக்கடையில் தேன் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

_____________________