படப்பிடிப்பு – நந்து சுந்து தமாஸ் கதை

0
384

_____________________________________

நந்து சுந்து

_____________________________________

வாசல் கதவு தட்டப்பட்டது. ஓடிப் போய் கதவைத் திறந்தார் எக்ஸெல். அது நடந்து போய் கதவைத் திறப்பது போல இருந்தது.

“யார் வாசல்ல?” என்றார் மிஸ்டர் எக்ஸ். அவர் பழைய செய்தித் தாள்களை அடுக்கிக் கொண்டிருந்தார். ஒரு பேப்பரில் படையப்பா படத்தின் விமரிசனம் வந்திருந்தது.

“அமேசான்லேந்து ஒரு பையன் வந்திருக்கான்”

“சவுத் அமெரிக்காலேந்து நடந்தே வந்திருக்கானா? அடப் பாவமே?”

“அமேசான் ஆன் லைன் ஷாப்பிங்க்லேந்து வந்திருந்தான். இந்தாங்க டப்பா..இவ்வளவு கனமா இருக்கே? என்ன ஆர்டர் செஞ்சீங்க? இப்போ சாணத்துல வரட்டி கூட விக்கறாங்களாம்”

“அதுக்கு கஸ்டமர் ரெவியூ வேற. அவனவன் வரட்டிக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் வேற கொடுக்கறான்”

“சரி..சரி..டப்பாவை பிரிச்சு பாருங்க….”

டப்பாவைப் பிரிக்க சிசர்ஸைத் தேடினார். கிடைக்கவில்லை. திடீரென அமெரிக்காவிலிருந்து மகன் ஒய் கூப்பிட்டான்.

“அமேசான்லேந்து ஏதாவது டெலிவரி ஆச்சா?” என்றான்.

“டெலிவரி ஆச்சு. இப்போ சிசேரியன் பண்ணனும். கத்திரியக் காணோம்”

“அப்பா…அந்த பார்சல் உனக்குத் தான். பிரிச்சுப் பாரு. என்ன ஏதுன்னு அப்புறமா சொல்றேன்” என்று போனை கட் செய்து தொடரும் போட்டான்.

அவன் எப்போதும் இப்படித்தான். திடீரென தொடரும் போடுவான். எக்ஸெல் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்தவன்.

டப்பாவைப் பிரித்தால் உள்ளே Hollow block செங்கல் மாதிரி ஒரு தெர்மோகோல் பாளம் இருந்தது. அதற்கும் உள்ளே ஒரு பெரிய காமிரா இருந்தது. கல்யாண வீட்டு சீர் மைசூர் பாக் சைஸுக்கு இருந்தது. ஒரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் காமிரா. கூடவே மூன்று லென்ஸ். சார்ஜர், மெமரி கார்ட் என்று ஏகப்பட்ட உதிரிகள் வேறு. பொன்னியின் செல்வன் சைஸுக்கு ஒரு user manual.

“என்ன இது? ஏதோ காமிரா மாதிரி இருக்கு? இதை பெர்முடாஸ் போட்ட பசங்க தானே தூக்கிகிட்டு திரிவாங்க..நமக்கு எதுக்கு?”

பத்திரிக்கை ஆபிஸில் கதையை தூக்கி ஓரமாக வைப்பது போல அந்த டப்பாவை அப்படியே தூக்கி வைத்தார்.

மறு நாள் மகன் ஒய் மறுபடியும் போன் செய்தான்.

“அப்பா..அந்த காமிராவைப் பாத்தியா? அது உனக்குத் தான்”

“எனக்கா? அதை வெச்சிகிட்டு என்னடா பண்றது?”

“அதுல போட்டோ எடுத்து பழகிக்கோ…இனிமே எந்த ஊருக்கு போனாலும் அதுல போட்டோ பிடிச்சு எனக்கு அனுப்பறே…வேணும்னா ஏதாவது போட்டோகிராபி க்ளாஸுக்குப் போ..இல்லேன்னா விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கத்துக்கோ”

மறுபடியும் தொடரும் போட்டு விட்டான்.

“இதென்னா..இவ்வளவு பெரிய காமிரா வைச்சு என்னை போட்டோ பிடிக்கச் சொல்றான். இதுல வாசல் எது..புழக்கடை எதுன்னு கூட தெரியல்லியே” என்று புலம்பினார் மிஸ்டர் எக்ஸ்.

செல்போன் காமிராவில் போட்டோ எடுப்பதற்கே தடுமாறுபவர் அவர். காமிரா பட்டனை அமுக்க நினைத்து பல முறை ஓலா பட்டனை அமுக்கி டாக்ஸி வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறது.

“ஏங்க. பையன் ஆசையா வாங்கி அனுப்பியிருக்கான். எப்படி எடுக்கனும்னு கேள்வி கேளுங்க….அவ்வையார் கேள்வி கேக்கல்லியா? வேலைப் பிடித்தது என்ன…வெண்ணீர் அணிந்தது என்னன்னு”

“அவங்க அவ்வையாரா..இல்லே ஹவ்வையாரா?”

“பையன் ஏதாவது க்ளாஸுக்கு போகச் சொல்றானே..போங்க” என்றார் எக்ஸெல்.

“க்ளாஸா..நானா..நோ சான்ஸ்..இனிமே டீ க்ளாஸைக் கூட தொட மாட்டேன்…”

“அடுத்த ப்ளாக்ல ஒரு மாமா இருக்காரு. எப்போப் பாத்தாலும் கழுத்துல காமிரா தொங்கும். கரப்பான் பூச்சியை எல்லாம் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துகிட்டு இருப்பாரு. அவர் கிட்டே கத்துக்குங்க”

“அவர் பேர் என்ன?”

“சாமிநாதன்..எல்லாரும் காமிராநாதன்னு கூப்பிடுவாங்க”

அன்று மாலை காமிராநாதன் வீட்டு கதவைத் தட்டினார் மிஸ்டர் எக்ஸ்.

காமிராநாதன் வெட் க்ரைண்டரை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்.

“ஹை ஸ்பீட் போட்டோகிராபி..ஓடற க்ரைண்டர் நிக்கற மாதிரி போட்டோவுல தெரியும். பாருங்க” என்று எடுத்த போட்டோவை வியூ ஸ்கிரீனில் காட்டினார்.

“முதல்ல ஸ்விட்சை போடுங்க சார்…கிரைண்டர் ஓடாம நிக்குது” என்றார் மிஸ்டர் எக்ஸ்.

“ஹீ..ஹீ…இது தான் ஸ்டாண்ட் அப் காமெடி …ஆமா என்ன வேணும் உங்களுக்கு?”

“நான் போட்டோகிராபி கத்துக்கனும்..நான் அடுத்த ப்ளாக்ல இருக்கேன்” என்று கை கொடுக்க கையை நீட்டினார்.

அவரின் கை பயங்கரமாக ஷேக் ஆகிக் கொண்டிருந்தது. இந்த சேக்கிழாருக்கு எப்படி போட்டோகிராபி கற்றுக் கொடுப்பது? இவர் ஸ்டில் போட்டோ எடுத்தால் கூட M TV வீடியோ ஆல்பம் மாதிரி ஏகத்துக்கும் ஆடுமே..

“கை ரொம்ப ஷேக் ஆகுதே..கைல ஜல்லடையக் கொடுத்தா அரிசி மாவை அஞ்சு நிமிஷத்துல ஜல்லிச்சிடுவீங்க போல இருக்கே”

“அது பிரச்சினை இல்லே…நான் எப்படியாவது ஹாண்டில் பண்ணிக்கறேன்”

“சரி..நான் சொல்லித் தர்ரேன். நான் பீஸ் எல்லாம் வாங்கறதில்லே…இந்த மாச கரண்ட் பில் மட்டும் நீங்க கட்டிடுங்க”

“சரி சார்…”

“ரொம்ப புழுக்கமா இருக்கு. கொஞ்சம் இருங்க ஏ.சி போட்டு விட்டறேன்…பங்கஜம் அப்படியே அந்த பெட் ரூம் ஏசியும் ஆன் பண்ணிக்கோ”

ஏதாவது பவர் ஷட்டவுன் வரக்கூடாதா என்று ஏங்கினார் மிஸ்டர் எக்ஸ். தமிழ்நாட்டை மின்சார மிகை மாநிலமாக யார் மாற்றச் சொன்னது?

“சரி…காமிரா கொண்டு வந்தீங்களா?”

“இல்லையே”

“போய் கொண்டு வாங்க”

கிளம்பும் முன் மிஸ்டர் எக்ஸ் தயங்கினார்.

“அந்த ஏசி ஆப் பண்ணிடலாமே”

“இல்லே. ஏசி பக்கத்துல தயிர் வெச்சிருக்கேன். இல்லேன்னா புளிச்சிப் போயிடும்”

மிஸ்டர் எக்ஸ் காமிராவை திருப்பிக் கொண்டு வரும் போது காமிராநாதன் வீட்டு இரண்டு பாத் ரூமிலும் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்திருந்தது.

“முதல்ல காமிராவை எப்படி பிடிச்சிக்கனும்னு சொல்றேன்…இடது கை வயித்துல இருக்கனும்”

“கைய எப்படி வயித்துக்குள்ள விடறது?”

“நாம என்ன எண்டாஸ்கோபியா எடுக்கறோம். வயித்துல இடது முழங்கைய அழுத்தி பிடிச்சிக்கனும். அப்போ தான் ஸ்டெடியா இருக்கும். இடது கை விரல் அஞ்சும் லென்ஸ் கீழே இருக்கனும். வலது கைய க்ளிக் பட்டன் மேல வைக்கனும்”

அவர் சொன்ன மாதிரியே மிஸ்டர் எக்ஸ் வைத்துக் கொண்டார். பானையை கவிழ்த்து பிடித்துக் கொண்டிருக்கும் காவிரித் தாய் மாதிரி இருந்தது அவர் போஸ்.

“இப்போ வியூ ஃபைண்டர்ல பாருங்க..என்ன தெரியுது”

“ஏ.சி ரொம்ப நேரமா ஓடிகிட்டு இருக்கறது தெரியுது”

“அந்த மூலைல ஒரு பூத் தொட்டி தெரியுது பாருங்க. அதைப் பாத்து க்ளிக் பண்ணுங்க”

மிஸ்டர் எக்ஸ் க்ளிக்கினார்.

“என்ன பூத்தொட்டி விழுந்ததா?”

“விழல்லயே…வேணும்னா போய் தள்ளி விட்டுடட்டுமா”

காமிராவை வாங்கிப் பார்த்தார் காமிராநாதன்.

“என்ன சார்..லென்ஸ் மூடிய கழட்டவே இல்லே”

“இல்லே..லென்ஸ் அழுக்கு ஆயிடும்னு தான் கழட்டல்லே”

“சரி..மூடிய கழட்டிட்டு இன்னொரு தடவை காமிராவை பிடிங்க…இதென்ன சார்..காமிரா கைல சரியாவே நிக்க மாட்டேங்குதே”

“அது Nikkon காமிரா சார். சரியா நிக்காது”

“ஓ.கே…நான் அந்த சுவத்தோரமா போய் நிக்கறேன். என்னை க்ளிக் பண்ணுங்க. ஜஸ்ட் aim and shoot”

“Shoot பண்ணனும்னா டெபுடி தாசில்தார் யாராவது ஆர்டர் கொடுக்கனுமே”

“பட்டனை அமுக்குங்க சார்”

மிஸ்டர் எக்ஸ் க்ளிக் பட்டனை அமுக்கினார்.

ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார். புகையிலிருந்து வந்த பூதம் மாதிரி கலங்கலாக தெரிந்தார்.

“அடடா..அவுட் ஆப் போகஸ். நீங்க செட்டிங் manual ல வெச்சிருக்கீங்க..Beginneers க்கு அது ஆகாது..நீங்க auto ல எடுங்க”

“இப்போ நான் ஆட்டோவுக்கு எங்கே போவேன்?..எல்லாரும் ஸ்டாண்ட்ல தந்தி பேப்பர் படிச்சிகிட்டு இருப்பாங்களே””

“இங்கே வாங்க…இந்த டயலை திருகுங்க. ஆட்டோனு போட்டிருக்கு பாருங்க. அந்த இடத்துல நிறுத்துங்க”

“இப்போ என்ன செய்யனும்”

“ஒன்னும் செய்ய வேணாம். எல்லா செட்டிங்கும் காமிராவே பாத்துக்கும்”

“பாத் ரூம் வாட்டர் ஹீட்டரை ஆப் பண்ணுமா?”

“நீங்க கீழே போங்க… இதே ஆட்டோ செட்டிங்க்ல போய் அபார்ட்மெண்ட்ல பாக்கறதை எல்லாம் படம் பிடிங்க..”

“அதுக்குத் தான் சி.சி.டி.வி காமிரா இருக்கே”

“செடி கொடி எல்லாம் எடுங்க சார்..அப்புறம் நாளைக்கு வாங்க…இன்னும் அட்வான்ஸ் செட்டிங் எல்லாம் சொல்லித் தர்ரேன்”

கீழே போனார். ஒரு குப்பை தொட்டி இருந்தது. அதை க்ளோஸ் அப்பில் போட்டோ பிடித்தார்.

“என்ன சார் பண்றீங்க?” என்றார் செக்யூரிட்டி.

“குப்பைய படம் பிடிக்கறேன்..பிடிச்சு National Garbage Channel க்கு அனுப்பப் போறேன்.

வீட்டுக்குப் போனதும் எக்ஸெல் செய்திருந்த எலுமிச்சை சாதத்தை போட்டோ பிடித்தார். அது தேங்காய் சாதம் மாதிரி கறுப்பு வெள்ளையில் வந்தது. பின்னர் பார்த்தால் Black and white செட்டிங்கில் இருந்தது காமிரா.

“ஓ..இப்படி கூட தேங்காய் சாதம் செய்யலாமா” என்று அக மகிழ்ந்தார்.

திடீரென்று போய் வாஷிங் பவுடரை போட்டோ பிடித்தார்.

“என்ன பண்றீங்க?”

“Ariel shot எடுக்கறேன்”

மறு நாள் மறுபடியும் காமிராநாதன் வீட்டுக்குப் போனார்.

ஏ.சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.

“முதல்ல அபர்ச்சர் செட்டிங் பத்தி பாக்கலாம்”

அப்பச்சியை செட் செய்வது பற்றி பேசுகிறாரே.. பிரச்சினை ஏதாவது வந்து விடுமா என்று பயந்தார் மிஸ்டர் எக்ஸ்.

“அபர்ச்சர்ங்கறது லென்ஸ் ஓபனிங்…அது பெரிசா இருந்தா லைட் நிறைய பாஸ் ஆகும். அதை ஒரு நம்பர்ல சொல்லுவாங்க. நம்பர் கம்மியா இருந்தா அதிக ஓபனிங்..நம்பர் அதிகமா இருந்தா கம்மியான ஓபனிங்”

ஓபனிங்கே சரியில்லையே என்று கவலை வந்தது அவருக்கு.

“அடுத்தது ஒயிட் பேலன்ஸ்…”

“கோயம்பேட்ல எல்லாரும் கறுப்பு பேலன்ஸ் தான் சார் வெச்சிருக்காங்க”

“இது வேற பேலன்ஸ். இது மாறினா பிக்சர் கலர் கொஞ்சம் மாறும்”

மிஸ்டர் எக்ஸுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

“இன்னொரு செட்டிங் இருக்கு. அதுக்குப் பேர் I.S.O செட்டிங்”

ஐயையோ என்று கத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடினார் மிஸ்டர் எக்ஸ்.

இரவு முழுக்க கம்ப்யூட்டரில் அமர்ந்து எதையோ செய்து கொண்டிருந்தார்.

மறு நாள். வழக்கம் போல பழைய பேப்பர்களை நோண்ட ஆரம்பித்தார்.

“காமிரா கோச்சிங் போகல்லியா…பையனுக்கு தெரிஞ்சா கத்தப் போறான்”

“இனிமே கத்த மாட்டான்”

புரியாமல் நகர்ந்து போனார் எக்ஸெல்.

நான்கு நாள் கழித்து மகன் ஒய் போன் செய்தான்.

“அப்பா என்ன இது? அமேசான்லேந்து நிறைய புக் வந்திருக்கு இங்கே”

“எல்லாம் உனக்கு தான்..”

“அப்பா… ருத்ரம் சமகம்…செளந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம்..என்ன புக் இதெல்லாம்?”

“இது எல்லாத்தையும் நீ ஒரு வாரத்துல மனப்பாடம் செஞ்சி பாக்காம எனக்கு ஒப்பிக்கறே. அடுத்த வாரம் வீடியோ கால்ல வர்ரேன்”

“அப்பா…இது என் ஏரியா இல்லே..எனக்கு எப்படி இந்த வயசுல இதெல்லாம் வரும்?”

“எனக்கு மட்டும் இந்த வயசுல SLR காமிரால போட்டோ பிடிக்க வருமாடா?”

சற்று நேரம் மெளனமாக இருந்தான் மகன் ஒய்.

“சரிப்பா…உங்க மருமகளுக்கு கொடுத்திடறேன்”

அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார் மிஸ்டர் எக்ஸ்.