ஜோக் எழுதுவது எப்படி?

0
472

”ஜோக்ஸ் கிங்”

தே.ராஜாசிங் ஜெயக்குமார்
***************************
அத்தியாயம் -1

நகைச்சுவை வாழ்வின் அன்றாட தேவை ஆகிவிட்டது. மன அழுத்தங்களும், பிரச்னைகளும் துரத்தும் இந்நாளில், மனிதரை வாழ்விக்க வந்த மருந்துதான் நகைச்சுவை. நகைச்சுவை இன்றி இனிவரும் காலங்களில் நலவாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியாது.

இப்படிப்பட்ட நகைச்சுவை எப்படி வருகிறது? இயல்பாக வராவிட்டால் அதை எப்படித் தருவது? இயல்பாகவே எல்லாரிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது.அப்புறமும் சிலபேர் ஏன் கடப்பாரையை முழுங்கினமாதிரியே ‘உம் ‘ முன்னு அலையறாங்கன்னு கேட்கிறீங்களா? நகைச்சுவை சொல்வது, நகைச்சுவையாகப் பேசுவது ஒரு கலை.அதை உருவாக்கத்தெரியாவிட்டாலும் ரசிக்கத்தெரிந்தால் போதும்.இல்லாவிட்டால் இப்படித்தான்.

மானேஜரின் திட்டுக்கும், மனைவியின் குட்டுக்கும், இடைப்பட்ட இந்த ‘டேமேஜ்’ வாழ்வை நகைச்சுவை கொண்டுதான் ஓரளவு செப்பனிட இயலும்.அதற்காக லேட்டாக ஆபீஸ் சென்றுவிட்டு, மானேஜரின் மூடை கலகலப்பாக மாற்றுகிறேன் பேர்வழி என்று சிரிப்பாக காரணங்களைக் கூறுவதும், வீட்டுக்கு லேட்டாகச்சென்று கோபமாக இருக்கும் மனைவியிடம் கிச்சுக்கிச்சு மூட்டுகிறேன் பேர்வழி என்று நகைச்சுவையாகப் பேசி அசடு வழிவதும் எல்லா நாளும் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்ல முடியாது. சமயத்தில் அது சிரிப்பாய் சிரிக்கும் அளவுக்கு கொண்டுசென்று விடலாம். கிராமத்தில் வாழ்பவர்களுக்கு கூடி வாழ்வதால் நையாண்டியாக பேசுவது இயல்பாகவே வரும். மாமன் மச்சான் கிண்டல், அண்ணியிடம் கொழுந்தன் பேசும் கிண்டல் எல்லாமே இந்த அடிப்படையில்தான். நகரத்தில்தான் தனித்தனியான வாழ்க்கை மன அழுத்தத்தை இயல்பாகவே அதிகப்படுத்தி விடுகிறது. அதனால்தான் மன அழுத்தங்களை குறைக்க அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சிரிப்பு என்பது என்ன?
*********************************
சிரிப்பு என்பது மனிதரோடு மனிதனை இழுத்துச்சேர்க்கும் ஒரு காந்தக்கல் –சேப்டஸ்பரி
சிரிப்பும் அழுகையும் இரு மனைவிகள். ஒருத்தி கொஞ்சிப் பேசினால் மற்றவள் விலகி ஓடிவிடுவாள்.– லீஹண்ட்.
மனிதனுடைய இதயத்தை திறப்பது, அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான் –கார்லைல்.

இவையெல்லாம் சிரிப்பு பற்றி அறிஞர்கள் கூறியது.
ஒருவரியில் சொல்வதென்றால் …”எது மனிதன் உடலையும் உள்ளத்தை யும் ஒருங்கே மகிழ்ச்சிப்படுத்துகிறதோ அதுவே சிரிப்பு”. சிரிப்பு சிந்தனைக்கும் இட்டுச்சென்றால் அது மிகச்சிறப்பு.

சிரிப்புக்கென்று ஒரு தினம் உண்டு. அது மே மாதம் முதல்ஞாயிறு. இந்தியாவைச்சேர்ந்த டாக்டர் “மதன்கதாலியா” என்பவர் 1998ல் இதை அறிவித்தார். 2000 முதல் உலகெங்கும் இது பரவியது.

சிரிப்பு எப்படி ஏற்படுகிறது?
******************************
குரல்வளையில் உள்ள ‘ எபிக்ளாட்டிஸ்’ என்னும் வால்வு, குரல்நாணை அழுத்தும் போது சிரிப்பு உருவாகிறது.இது அறிவியல். அப்புறம் ஏன் வேலை மெனக்கெட்டு ஜோக் கை தேடி அலையணும். அந்த வால்வு மூலம், குரல் நாணை ஆர்மோனியத்தை அமுக்குவதுபோன்ற ஏற்பாட்டை மருந்துகள் மூலம் செஞ்சிட்டாப் போகுது.என்று நம்மில் சிலர் யோசிக்கக் கூடும். அவையெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால்தான் ,இயற்கையான சிரிப்பு முறையை அறிஞர்கள் முன்னிறுத்துகிறார்கள். இப்பொழுது ஜோக் எழுதுவது எத்தனை முக்கியமான பணி என்பது புரிகிறதா?

சிரிப்பின் சிறப்பு
*******************
சிரிக்கும் போது, 5 முதல் 53. தசைகள் வரை நமது உடலில் வேலைலைசெய்கின்றன. 300 தசைகளுக்கும் மேல் வேலை செய்கின்றன என்பாரும் உண்டு. சிரிப்பு மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று.
சிம்பன்சி, கொரில்லா ,உராங் குட்டான், போன்ற குரங்கு வகைகளுக்கும் சிரிப்பு வரும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்

. ‘ ‘அஃபோனோஜெலியா’ என்கின்ற நோய் இருக்கும் மனிதன் மட்டும் , சிரிக்கவே முடியாது.

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கலோரிகளைச் செலவளிக்க என்னன்ன உடற்பயிற்சிகளையும் , மனப்பயிற்சிகளையும் நாடுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே! ஒருமுறை வயிறுகுலுங்கச் சிரித்தால் மூன்றரை கலோரி செலவாகிறது. 15 நிமிடம் தொடர்ந்து சிரித்தால் வாழ்நாளில் 2 நாட்கள் போனஸாக கிடைக்கிறது.இதனாலேயே ‘லாஃபிங் தெரபி ‘ போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. சிரிப்புக்கென்றே யோகா முறைகளும் வந்துவிட்டன. “ஜிடென் கோஹி ” என்பவர் சிரிப்புக்கென்றே “ஹாஸ்ய யோகா” வை உருவாக்கினார்.மூன்றுமாத குழந்தை யிலிருந்து மனிதன் சிரிக்கிறான். “லியானார் டோ டாவின்ஸி” யின் உலகப் புகழ் பெற்ற “மோனோலிசா “வின் சிரிப்பு என்ன உணர்வைப்பிரதிபலிக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார்கள்.ஜார்ஜ்புஷ், கிளிண்டன், ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் மட்டுமல்ல , நகைச்சுவை யாகப் பேசவும் கூடியவர்கள் என்பது சிறப்புச்செய்தி. இந்தியாவில் சிரிக்காமலேயே 5 வருடம் ஆட்சியை ஓட்டியவர் என்று நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது விமர்சனங்கள் உண்டு.இதெல்லாம் நகைச்சுவை எந்த அளவுக்கு முக்கியம் என்பதைக் காட்ட கூறினேன்.

அதெல்லாம் சரிப்பா, ஜோக் எழுதுவது எப்படி என்று தலைப்பு கொடுத்துவிட்டு , நாலுபேருக்கு ஜோக் எழுத டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா…நீ வேற எங்கெங்கேயோ போறியே ராசா…என்ற எண்ணம் தோன்றுகிறதா?

ஒருகாரியத்தில் தீவிரமாக இறங்க அதனை நேசிக்க வேண்டும்.அதை தீவிரமாக நேசிக்க அதைப்பற்றிய சாதகங்களை, பெருமைகளை முக்கியத்துவத்தை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அதைப்பற்றிய ஈர்ப்பு ஏற்படும்.

இப்பொழுது உங்களுக்கு ஜோக் எவ்வளவு முக்கியம் , அதை எழுதுபவன் எத்தனை மேலானவன் என்கிற எண்ணம் வந்துவிட்டதா?

இனிமேல் ஜோக் எழுதுவது, ஜோக் வகைகள் எல்லாம் பற்றி அடுத்த அத்தியாயத்திலே சொல்வோம்ல.

–அடுத்தவாரம் சிரிப்போம்…

நன்றி : தமிழக எழுத்தாளர்கள் குழுமம்