ஜோக் எழுதுவது எப்படி? தஞ்சை ராஜாசிங்

0
354

அத்தியாயம் –3

நகைச்சுவை யின் தோற்றம் , வளர்ச்சி , வகைகள் பற்றி சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.இனி நகைச்சுவை, ஜோக் எழுதுவதற்குள் நாம் புகுந்து விடலாம்.

நகைச்சுவை உணர்வு நம் எல்லோரிடமுமே உள்ளது என்று ஏற்கனவே பார்த்தோம். அப்படியெனில் நாம் எல்லாருமே நகைச்சுவை எழுதிவிடமுடியுமா என்றால் முடியும். ஆனால் அதற்கு கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் யோசிப்பு, கொஞ்சம் உழைப்பு, இவையெல்லாம் தேவைப்படும்.

நகைச்சுவை எழுதுவது எளிதுதான். ஆனால் நகைச்சுவை எப்படி எழுதுவது என்று சொல்வது, கொஞ்சம் கடினம்தான்.
நகைச்சுவை எழுத ஆர்வமும் ,திறமையும் முக்கியம்.சிலபேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்வார்கள். நகைச்சுவை எழுதவேண்டும் என்று முடிவு செய்ததும் அதற்கான உபகரணங்களுடன் எழுத உட்கார்ந்து விட்டு, மோட்டு வளையையும், சுவரையும் பார்த்து யோசித்து, சிலபேர் கடகடவென எழுதத் தொடங்கிவிடுவார்கள்.அதில் தவறில்லை.அது ஆர்வம்.அந்த ஆர்வத்துடன் கொஞ்சம் ஹோம் ஒர்க், யோசித்தல், மொழிப்பயிற்சி, நடைமுறை வாழ்க்கை எல்லாம் கலந்து உழைப்பையும் கொடுத்தால் உங்களிடம் இருக்கும் நல்ல நகைச்சுவை, ஜோக் எழுத்தாளன் வெளியே வருவது உறுதி.

இந்தக்கட்டுரையைப் படித்ததும் கடகட வென நகைச்சுவை கட்டுரை, ஜோக் போன்றவைகளை எழுதித் தள்ளிவிட முடியுமா என்றால் இல்லை என்பேன் நான்.
கேட்டது, படித்தது ஆலோசனைகள் எல்லாம் உங்களுக்கு 25% முதல் 30% வரை உதவுமே தவிர, அதன் பின் உங்கள் சொந்த திறமைதான் 75 % முதல் 70 %வரை உங்களுக்கு உதவும்.

நகைச்சுவை, ஜோக்
**********************
நகைச்சுவை , ஜோக் இரண்டும் ஒன்றா… என்றால் இல்லை. எல்லா ஜோக்கும் நகைச்சுவை ஆகலாம். ஆனால் எல்லா நகைச்சுவையும் ஜோக் ஆகாது.

நகைச்சுவை கதை, கட்டுரைகளில் ஜோக்குகள் தனியாக இடம் பெறாது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நகைச்சுவை மெல்லிதாக இழையோடும்.போகப்போக அது வேகம் எடுக்கும். வாசகர்களின் எண்ணமெல்லாம் பரவச நிலைக்கு கொண்டு சென்று , எழுந்து ஆடும் நிலைக்கெல்லாம் கொண்டுசெல்லாவிட்டாலும், மெல்லிதாக இதழ்களில் புன்னகையைக் கொண்டுவந்தாலே கதையோ, கட்டுரையோ வெற்றிபெற்றுவிடும். இதில் தொடக்கமே நகைச்சுவை யாக இருக்கவேண்டும் .இல்லாவிட்டால் வாசகர்கள் படிப்பதை இடையிலேயே நிறுத்திவிட்டு , கிச்சுக்கிச்சு தாம்பாளம் விளையாட கிளம்பிவிடும் ஆபத்து உண்டு.

சோ போன்றவர்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகள் அரசியல் கட்டுரை என்பதால் , அரசியல் நிலை மாறிவிட்டால் அது சிறப்பிழக்கக் கூடும். ஆனால், தேவன் எழுதிய ” ராஜத்தின் மனோரதம் ” , கல்கி எழுதிய. “ஏட்டிக்குப் போட்டி ” ஆகிய கட்டுரைகள் எழுதி பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் ஜீவனுள்ள நகைச்சுவை சிறப்புடன் உள்ளன.

நகைச்சுவை கட்டுரைக்கு எளியநடை, கதாபாத்திரங்களின் பெயரிலேயே நகைச்சுவை தரும் தன்மை இருக்கவேண்டும்.இல்லையேல் “சுய எள்ளல் ” முறையிலும் அமையலாம். அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை தொடர் இது போன்று அமைந்ததே.ஆர்.கே.நாராயணனின் புத்தகங்களில் வரும் கதைகளில் நகைச்சுவை கலந்து காணப்படும். நகைச்சுவை நடை அவருக்கு கைவந்த கலை.

ஹாஹாஹா அன்று எழுந்து நின்று விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுதான் நகைச்சுவை அல்லது ஜோக் என்று எண்ணக்கூடாது. ஜோக்குக்கு பிரபலமாக சொல்லப்படும் சிலபத்திரிகைகளில் இது போன்று உடனடியாக. வெடிச்சிரிப்பவைதான் நல்ல நகைச்சுவை என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது தவறு அல்ல. அது அவர்களின் இலக்கு.படிக்கும் வாசகர்கள் மனதில் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வைத் தோற்றுவித்தாலே அது நகைச்சுவை தான் என்று இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளலாம்.

ஜோக்குகள்
*************
ஜோக்குகள் இன்று பத்திரிகைகளில் தவிர்க்க முடியாத இடத்தைப்பெற்றுவிட்டன. கதைகளையோ, தொடர்களையோ படிக்கும் அளவுக்கு இன்றைய தலைமுறைக்கு பொறுமையும் நேரமும் இல்லை என்பதால் நகைச்சுவைத் துணுக்குகள் சிறப்பிடம் பெறுகின்றன. சொல்ல வேண்டிய விஷயத்தை , நறுக்கு தெறித்தாற்போல் இரண்டு வரிகளிலோ ஒரே வரியிலோ சொல்வது இதன் சிறப்பு.
இதற்கும் மொழிநடை , பேச்சுத்தமிழ் வழக்கு, நடைமுறை அரசியல் சமூக நிலை தெரிந்திருக்கவேண்டும். எழுதுவதெல்லாம் நகைச்சுவை ஆகிவிடாது.படித்ததும் என்ன விஷத்தைச் சொல்கிறது என்பது பட்டென புரிந்து இதழ்களில் கோடுபோல நகை வரச்செய்வதை நகைச்சுவையாக ஒப்புக்கொள்ளலாம். இதையும் நகைச்சுவையாக எழுதியிருக்கிறானே என்று வாசகர்கள் சிரிக்கும்படி ,நகைச்சுவைகள் அமையக்கூடாது.அல்லது இதில் என்ன நகைச்சுவை உள்ளது என்று நண்பர்களுக்கு போன்போட்டுக்கேட்கும் அளவுக்கோ, வாட்ஸ்-அப் க்ரூப்பில் போட்டி வைக்கும் அளவிற்கோ ஜோக் இருக்கக்கூடாது.

தொடரும்.