சோழச் சுவடுகள்

0
466

சோழச் சுவடுகள்

உடையார்பாளையம் ஜமீன்

சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து மேற்கு திசையில் 8 கிமீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

உடையார் பாளையம்
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஜமீனும் ஒன்று. வீரத்திற்கும் கொடைக்கும் கல்விக்கும் பெயர் பெற்ற ஜமீன்தார்கள் பலர் தொடர்ச்சியாக உடையார் பாளையத்தை ஆட்சி செய்துள்ளார்கள். பாளையக்காரர்களாகிய இவர்கள் காலாட்கள் தோழ உடையார்கள் என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார்கள்.

பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் சத்திரிய மரபைச் சேர்ந்த தோழ உடையார்கள் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு ‘உடையார்பாளையம்’ என்னும் பெயருண்டாயிற்று .
இன்றும் உடையார் பாளையத்தில் ஜமீன் ஆட்சியின் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள், வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

வடதமிழகத்தின் மிகப்பெரிய பாளையம், உடையார்பாளையம். நாயக்க மன்னர்களைக் குறித்த வரலாறுகளில் உடையார் பாளையம் ஜமீன் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தைக் கல்வெட்டு (கி.பி. 18ஆம் நூற்றாண்டு) குறிப்பிடுகின்றது. இவர்கள் வன்னிய மரபினர் என்றும் பிச்சாவரம் சோழர்களின் சம்மந்திகள் என்றும் அறியமுடிகிறது.

காஞ்சிபுரத்தைப் பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள் என்ற பெருமை இவர்களுக்குண்டு. இதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்றும் உடையார் பாளையம் உற்சவம்’ கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுர ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுகக் கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் கொடையாகும். இவர்கள் வட தமிழகத்தின் பழைமையான கோயில்கள் பலவற்றைப் புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர்.

இளங்கோ நாகமுத்து