சென்னை 80 – இதயம் நெகிழும் நினைவுகள்…

0
220

EVER GREEN AIR:CHENNAI:
Yesterday was the 80th anniversary of All India Radio,Chennai which is like an alma mater for me.If I learnt the art of broadcasting at AIR, Tiruchirappalli I learnt the science of media management at AIR,Chennai.Here is my humble tribute to this great institution:

எத்தனை கோடி சித்திரம் வரைந்தாய் எங்கள் வானொலியே

1967ம் ஆண்டு அக்டோபர் 9ம் நாள் மௌண்ட் ரோடு என்று அன்று அழைக்கப்பட்ட சென்னையின் அண்ணா சாலையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வானொலிப் பெட்டிக்கான பேட்டரி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு அனைத்திந்திய வானொலி விற்பனையாளர் சங்கத்தினர் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.தங்களது விற்பனைக்குத் தேவையான வானொலி பேட்டரிகளை அந்த நிறுவனம் வினியோகிப்பதில்லை , அதனால் வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது,இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கறுப்புச் சந்தையினர் பேட்டரிகளை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர் என்பதே அவர்களது குறை. இன்று ஒரு மணி நேரம் Wi Fi தடைப்பட்டால் நாம் பொறுமையிழப்பது போல் அன்று வானொலியைப் பயன்படுத்த தடை ஏற்பட்டால் மக்கள் பரபரப்படைந்தனர்.
Wi Fi,வானொலி இரண்டுமே தொழில் நுட்பத்தின் விந்தைப் படைப்புகள்தான். என்றாலும் ஒலிபரப்பாளர்களின் மதிநுட்பத்தால், வானொலி, நேயர்களின் உற்ற தோழன் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது. சென்னை வானொலி, தொடக்க நாள் முதலே நேயர்களின் நெருங்கிய நண்பனாக இயங்கி வருகிறது.தொழில் நுட்பத்தின் வளர்ச்சி,வாழ்க்கை முறையில் ஏற்படும் முன்னேற்றம் இவற்றை அனுசரித்துத் தேவையான மாற்றங்களை அவ்வப்போது மேற்கொள்வதால் இந்த எண்பதாண்டு நிறுவனம் இன்றும் புதுமைப் பொலிவுடன் உலகத்தரம் வாய்ந்த நிலையமாக விளங்குகிறது.
வர்த்தகம் செழிக்க வாடிக்கையாளர் முக்கியம் என்பது போல வானொலியின் பணி சிறக்க நேயர்கள் முக்கியமானவர்கள்.1938ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வானொலியின் முதல் இயக்குநர் விக்டர் பரஞ்ஜோதி.அவர் நேயர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று சென்னை வானொலியின் நிகழ்ச்சிகள் பற்றிக் கருத்துக்களைக் கேட்பாராம்.மெரினா கடற்கரை,பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் நகராட்சி நிறுவியிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் பொதுமக்கள் மத்தியில் தாமும் ஒரு நேயர் போல கலந்து, அவர்கள் நிகழ்ச்சி பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு அறிவாராம்.நேயர் கருத்தறிய நிலைய இயக்குநர் நகர்வலம் மேற்கொண்டார் என்பது பெருமைக்குரிய செய்தியன்றோ!
பின் நாட்களில் நேயர் எழுதும் கடிதங்கள் நிலையத்தார்க்கு வழிகாட்டியாக அமைந்தன.நிலைய இயக்குனர்கள் தினமும் நேயர் கடிதங்களைப் பார்ப்பதை முதல் பணியாக மேற்கொள்வர்.

நேயர்களின் பாராட்டைவிட அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.வானொலி நடத்தும் வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சிகளில் தலையாயது வானொலி நாடக விழா. இந்த விழா நிறைவு பெற்றவுடன் நிபுணத்துவம் மிக்க ஒரு நேயர் வழங்கும் திறனாய்வு ஒலிபரப்பப்படும்.நான்சென்னை நிலைய இயக்குநராக பணியாற்றியபோது ஒரு நாடகவிழா முடிந்தபின், திறனாய்வு வழங்கிய நிபுணர் என்னை சந்தித்தார்.”நான் வழங்கிய திறனாய்வு எப்படியிருந்த்து?’ என்று கேட்டார்.”மன்னிக்கவும், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஒலிபரப்பைக் கேட்க முடியவில்லை” என்று குற்றவுணர்வுடன் பதிலளித்தேன்.அமைதியான சுபாவம் கொண்ட அவருக்கு வந்ததே கோபம்.”நிலைய இயக்குனரே கேட்கவில்லை என்றால் நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் “ என்று தம் ஆதங்கத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினார். அவரது நிலைப்பாட்டின் நியாயத்தை உணர்ந்த நான் உடனே அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்டு என் கருத்தை அவருக்குத் தெரிவித்தேன்.நிலைய இயக்குனர் செய்தாலும் குற்றம் குற்றமே என்று உரிமையுடன் இடித்துரைக்கும் அத்தகைய நேயர்களே வானொலியின் சொத்து.
நேயர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் நிகழ்ச்சிகளும் பலவுண்டு. பல்துறை நிபுணர்கள், சமுதாயத்தில் பிரபலமானவர்கள் ஆகியோரை நிலையத்திற்கு அழைத்து அவர்களுடன் நேயர்கள் உரையாடுவர். இப்பொழுது தொலைபேசி வழி உரையாடும் நிகழ்ச்சிகள் தினமும் ஒலிபரப்பாவதால் நேயர்களுக்குப் பரவலாக வாய்ப்பளிக்க முடிகிறது.
சிறுவர்கள் என்றால் வானொலிக்குக் குதூகலம், வானொலி என்றால் சிறுவர்களுக்குக் கொண்டாட்டம். மேற்கத்திய இசைமேதை ஹேண்டல் மானுவேல் 1940களில் சென்னை வானொலியில் மேற்கத்திய இசைப்பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார்.அவர் சனிக்கிழமை தோறும் பிற்பகலில் குழந்தைகளுக்கான ஆங்கில நிகழ்ச்சியை வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை பள்ளிச் சிறுவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பர்.கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே அந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடும் சிறார்க்கு வாழ்த்து கூறப்படும்.நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.இந்த நிகழ்ச்சி Buds and Blossoms என்ற பெயரில் இன்றும் தொடர்கிறது.தமிழில் வழங்கப்படும் ‘சிறுவர் சோலை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி ‘வானொலி அண்ணா’ என்று புகழ் பெற்றவர்கள் அய்யாசாமி, கூத்தபிரான் ஆகியோர்.இன்று 70,80 வயதைத் தாண்டிய பெரியவர்கள்கூட தங்களது பள்ளி நாட்களில் வானொலியின் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வர்.
மழலையரைத் தூங்கவைக்க தாய் தாலாட்டு பாடுவாள் என்பது புதிய செய்தியல்ல.ஆனால் முதியவர்களைத் தூங்கவைக்க வானொலி தாலாட்டு பாடும் என்பது சுவாரசியமான தகவலன்றோ! நான் சென்னை நிலைய இயக்குனராக இருந்தபோது ரெயின்போ பண்பலையில் இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பாகி வந்த நினைவில் நின்ற திரைப்படப் பாடல் நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்தோம்.ஓய்வு பெற்ற மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி தொலைபேசியில் பேசினார்,”என் அண்ணா எண்பது வயதானவர்.நீங்கள் இதுகாறும் வழங்கி வந்த நினைவில் நின்ற படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டே உறங்கி விடுவார், இப்போது அந்த நிகழ்ச்சி இல்லாததால் உறங்க சிரமப்படுகிறார், தயவு செய்து நீங்கள் செய்த மாற்றத்தை மாற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.அவரது வேண்டுகோளை ஓரளவு நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சியை மாற்றி அமைத்தோம்.விவித் பாரதியில் இரவு 10 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்தி திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே மன அமைதியுடன் உறங்குவோம் என்று கூறும் முதியவர்களும் உண்டு.மூத்த குடிமக்களின் நலன் பற்றிய விழிப்புணர்வு இன்றுபோல் வளராத நாட்களிலேயே அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வானொலி வழங்கி வந்துள்ளது.சென்னை வானொலியின் ‘கனிந்த வாழ்வு’ நிகழ்ச்சி முதுமைப்பருவம் அடைந்தோர்க்கும், அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமையுள்ள இளைய சமுதாயத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகும்.
பிரபல அமெரிக்க எழுத்தாளர் Peggy Noonan வானொலியின் தனித்தன்மையை விவரிக்கையில் “Television gives everyone an image, but radio gives birth to million images in million brains “ என்றார்.அவர் gives birth என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும்.இதனையே ‘வானொலியின் வர்ணனை ஒரு உயிர்த்துடிப்புள்ள குழந்தை’ என்று “வளரும் ஒலிபரப்புக் கலை “ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர்கள் கோ.செல்வம், விஜய திருவேங்கடம் ஆகியொர் இந்த நூலின் ஆசிரியர்கள். அவர்கள் கூறும் எடுத்துக்காட்டு ஒன்றினைக் காண்போம்:
“ஒரு நண்டு ஒரு மனிதர் மீது ஊர்வதை தொலைக்காட்சியில் படம் பிடித்துக் காண்பித்தால் நகைச்சுவை உணர்வு தோன்றலாம்.இதையே சொலல் வல்லார் வானொலியில் வர்ணித்தால், கேட்கும் நேயரே நண்டு தம் மீது ஊர்வதாக நினைத்து கையையும் காலையும் உதறுவார்”.
வானொலியின் இந்த சிறப்புத் தன்மையால்தான் ஆலயத் திருவிழாக்கள்,விளையாட்டுப் போட்டிகள்,ஊர்வலங்கள் போன்றவற்றை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை நேயர்களுக்கு வழங்க முடிகிறது.1970கள் வரை கிரிக்கெட் என்றால் டெஸ்ட் போட்டி மட்டுமே, ஒருநாள் போட்டி,T20, IPL என்பன பிற்கால வரவுகள்.அந்நாளில் பெரும்பாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறும்.சென்னை வானொலி வழங்கிய தமிழ் நேர்முக வர்ணனைகள் ஆங்கிலம் அறியாத நேயர்களையும் கிரிக்கெட் ரசிகர்களாக மாற்றியது.IAS அதிகாரி இராமமூர்த்தி அவர்கள் தனக்கே உரிய பாணியில் விளையாட்டை வர்ணிப்பார். Middle order batsman ஒருவர் தவிர்க்க வேண்டிய பந்தை அடித்து, வந்த வேகத்தில் pavilion திரும்பினார்.”நல்லதோர் பந்தை நலங்கெட புழுதியில் எறிந்து விட்டார்’என்று கவிதைச்சுவையுடன் இராமமூர்த்தி வர்ணித்த போது, வீழ்ந்தது இந்திய விக்கெட் என்பதையும் மறந்து வானொலி நேயர்கள் கைதட்டி ரசித்திருப்பர்.கிரிக்கெட்,வானொலி,நேயர்களுக்கிடையேயான முத்தரப்பு உறவு சுவாரஸ்யமானது.நாளை தேர்வு எழுதவிருக்கும் மாணவர் கிரிக்கெட் வர்ணனையை மெல்லிய
ஒலியில் கேட்டுக்கொண்டே புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பார்,கணிதத்தில் நூற்றுக்கு நூரறு வாங்க முடியுமா என்ற கவலையை விட அவரது அபிமான பேட்ஸ்மன் சதம் அடிப்பாரா என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.ஒரு இளைஞர் வெறுங்கையை உயர்த்தி வேகப்பந்து வீசிக்கொண்டு வீதியில் நடந்து செல்கிறார் என்றால் அவர் சற்று முன் கிரிக்கெடவர்ணனையைக் கேட்டிருக்கிறார் என்று ஊகிக்கலாம்.தொலைக் காட்சி வந்த பிறகும்கூட TV யில் ஒலியை அமைதிப் படுத்திவிட்டு , காட்சியை மட்டும் பார்த்துக்கொண்டு, வானொலியின் வர்ணனையைக் கேட்பர்.வானொலி அவ்வளவு தெளிவாக விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் நேயர் மனக்கண் முன் நிறுத்தும்.
பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஒரு கின்னஸ் சாதனை.தொலைக்காட்சியும்,இன்றைய அளவு தொலைத்தொடர்பும் இல்லாத அந்த நாளில்,சென்னை வானொலி வழங்கிய நேர்முக வர்ணனையும் ஒரு சாதனையே.எவ்வளவு சிரமங்களுக்கு இடையே இந்த வர்ணனையை சிறப்பாக வழங்கினோம் என்று சென்னை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் ரா.நாகராஜன் “நினைப்பவை நிறைவேறினால்” என்ற தமது சுயசரிதையில் விவரித்துள்ளார்.
1965ம் ஆண்டு ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனத்தைத் தொடங்கி வைத்த அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் S.இராதாகிருஷ்ணன் ஒரு உடற்பயிற்சிஅரங்கு உடல்நலனை வளர்க்க உதவுவது போல், இசை நம் ஆன்ம நலனுக்கு உறுதுணை என்றார்.சென்னை வானொலி நிலையம் இசைவளர்ச்சிக்கு ஆற்றும் பணிகளுள், உலகப் புகழ்பெற்ற மார்கழி இசைவிழா நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழும் பிறமொழியினர் தேவைக்காக தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி மொழி நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின்றன.உகாதி,ஓணம் பண்டிகைகளின் போது நேயர் முன்னிலையில் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் எப்போதுமே அரங்கம் நிறைந்த பெருவிழாக்கள்தான்.
தொலைக் காட்சியின் பெருக்கத்தால் வானொலி தொய்வடைகிறதோ என்று பேசப்பட்ட காலத்தில் Video can never kill the radio star என்று நிரூபித்தவர் தென்கச்சி சுவாமினாதன்.பொருட்சுவையும்,நகைச்சுவையும் நிரம்பிய அவரது ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியின் சிறப்பினை நான் விவரித்துக் கூறத் தேவையில்லை . பண்பலை ஒலிபரப்பிலும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புது உத்திகளுடன் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
இப்படி கடந்த எண்பது ஆண்டுக்கால ஒலிபரப்புப் பணியில், சென்னை வானொலி, ஒலி என்னும் தூரிகை கொண்டு வரைந்த எழிலோவியங்கள் பல கோடி. இன்றும் சீரிளமைத் திறத்தோடு செயல்படும் எங்கள் வானொலிக்கு என்றும் வயது பதினாறு.
(Broadcast over FM Gold AIR, Chennai on 16 June 2018 to mark the 80th anniversary)
– திரு.ஶ்ரீனிவாச ராகவன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து