கஜா புயல் – நம் மக்களை மீட்போம் வாருங்கள்!

0
152

இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை,யாரும் யாரையும் குறை சொல்வதற்கு நேரமுமில்லை,அது தேவையுமில்லை…

கஜா புயல் ஒரே இரவில் நம் கடலோர மாவட்ட மக்களை கையேந்தி வீதியில் நிற்கும் கோரமான நிலைக்கு தள்ளிவிட்டது.

வரலாறு காணாத பெரும் சீரழிவை இயற்கை நடத்தியிருக்கிறது…

பச்சை பசேலேன நாம் ரசித்த கிராமங்கள் கஜா என்னும் புயல் அசுரனின் காற்றுக் கால்களில் மீதிபட்டு நசுங்கிக் கிடக்கிறது…

மின் கம்பங்கள் எல்லாம் ஒடிந்தும் பறந்தும் கிடக்கின்றன.
பெரும்பாலும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதியில் மின்துறை புதிதாகவே மின் பாதை அமைத்தாக வேண்டும்.

பல இடங்களில் இருந்து வந்த மின்துறை ஊழியர்களின் உழைப்பை நிச்சயம் நாம் தலைவணங்கிப் பாராட்ட வேண்டும்.

புயலுக்கு பிறகான மழையிலும் நனைந்து கொண்டே அவர்கள் அந்தரத்தில் மக்களுக்காக தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் உறைவிடத்தை பறிகொடுத்த இலட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

சிலர் சங்கோஜப்பட்டு சிதிலமடைந்த வீடுகளுக்குள் தவிக்கிறார்கள்.

வயோதிகர்கள்,இளம் பெண்கள்,பள்ளிப் பருவ சிறுவர் சிறுமிகள்,புதிதாய் பூமிக்கு வந்த பச்சிளம் குழந்தைகள் எல்லாம் உணவுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த மண்ணோடு போராடி உழவார பணி செய்து நமக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பிய பரம்பரை விவசாய பெருமக்கள் பேருந்து நிறுத்தத்திலும்,
சாலையோரத்திலும் கையேந்தி நிற்கிறார்கள்.

ஒரு மெழுகுவர்த்தியோ,ஒரு கொசு வத்தியோ,ஒரு பிஸ்கட் பாக்கெட்டோ கிடைக்காதா என்று கடந்து செல்லும் வாகனங்களிடம் வரம் கேட்கிறார்கள்.

2004 ல் நாம் சந்தித்த சுனாமியை விட பல மடங்கு பெரிய வாழ்வாதார பேரிழப்பு இது.

இரண்டு நாள் மின்சாரம் தடை பட்டதற்கே பொறுத்தருள முடியாத மக்கள் இவர்களின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்த வேளை உணவுக்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து,ஒண்டிக் கிடந்த குடிசைகளையும் இழந்து நிர்க@தியாய் நிற்கும் இவர்களுக்கு உங்களால் எந்த வழியில் முடியுமோ அத்தனை வழிகளிலும் உதவி செய்யுங்கள்.

சுனாமியின் போது கிடைத்து போன்ற தன்னார்வ அமைப்புகளின் பிரமாண்ட உதவிகள் போல இப்போது பெரிய உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அவர்கள் முகங்களில் வாழ்க்கை மீதான எந்த ஒரு நம்பிக்கையும் தென்பட வில்லை.அவர்களின் இழப்பை ஈடு செய்வது சாதாரண பணியல்ல.

அரசாங்கங்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களும் தாங்கள் இதுவரை கற்ற அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தினால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும்.

வேளாண்துறை,மின்துறை,பொதுப்பணித்துறை,கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அற்பணிப்போடு இயங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியாளர்கள் ஒரு கிராமத்தைக் கூட விட்டு வைக்காமல் மக்களின் பசியாற்றி அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கையூட்ட வேண்டும்.

மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ஒருங்கிணைந்து நிரந்தர குடியிருப்பு வசதிகளை உருவாக்குவது மிக மிக அவசியம்,
அதற்கான அறிவிப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

விவசாயிகளுக்கு நியாயமான உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

மீனவர்களின் பொருளாதார சேதாரத்தை சரி செய்ய வேண்டும்.

வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது,
மின் இணைப்பு, சாலை வசதிகளை சரி செய்வது உடனடித் தேவையாக உள்ளது.

தன்னார்வளர்களே,
சமூக அக்கரையுள்ள நண்பர்களே உடனடியாக நம்மக்களை சந்தித்து உதவுங்கள்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்,
தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.

இப்போது நாம் நம் மக்களுக்கு உதவாவிட்டால் நாம் வாழ்வதில் அர்த்தமில்லை.

பன்னால்,செண்பகராயநல்லூர்,காமேஸ்வரம் பகுதியில் எங்களால் முடிந்த சிறு உதவிகளை நேசகானம் இணைய ஊடகம் சார்பாக ஒருங்கிணைத்து செய்து வந்தோம்.

இது ஒரு நாளில் முடிகிற வேலையல்ல…

தொடர் சேவை அந்தப்பகுதியில் தேவைப்படுகிறது.

கஜா புயல் வீசிய போது உயிர்களை காப்பாற்றிய அரசு ஊசலாடிக்கொண்டிருக்கும் நம் மக்களின் உயிர்களை காக்க ஒரு சிறிய அளவு முறைகேடு இல்லாமல் மக்களை மீட்டு எடுக்க வேண்டும்.

மீண்டும் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

அவர்கள் நம் மக்கள்!

காரைக்கால் கே.பிரபாகரன்

www.nesaganam.com

9488992571