எலியும், பூனையும்..!

0
608

ரோமாபுரி நாட்டை அதியமான் என்ற இளவரசர் ஆண்டு வந்தார். அவர் ஓர் மிகச் சிறந்த போர் வீரர் ஆவார். அவருடைய வாள்வீச்சு போருக்கு அந்த நாட்டில் வேறுயாறும் ஈடு இணையாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் வாள்வீசி போர் புரிவதில் வல்லவர் ஆவார்.

அவர் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது எலி ஒன்று குறுக்கே ஓடியது. அதைப் பார்த்த இளவரசர் உடனே அதன் மீது வாளை வீசினார். ஆனால், அந்த எலி தப்பித்துச் சென்றது.

ஆனால், இளவரசரோ விடாமல், அதனைத் துரத்தி வாளை வீசினார், மீண்டும் அந்த எலி தப்பித்து அதன் வளைக்குள் புகுந்து கொண்டது. ஒரு எலியின் மேல் வாள்வீசி நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என்று நினைத்து இளவரசர் மிகவும் வருத்தம் கொண்டார்.

அப்போது அங்கு வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று இளவரசரிடம் கேட்டார். இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத போது, ஒரு சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லை, என நடந்ததை இளவரசர் விவரித்து கூறினார்.

அதற்கு அரசர் சிரித்துக் கொண்டே, எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! அது எலியை பிடித்து விடும் என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது.

ஆனால், அந்த எலி எளிதாக பூனையிடம் இருந்து தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அச்சமயம் அமைச்சர் அங்கு வந்து, என்ன அரசே? நீங்களும், இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு அரசர் நடந்ததைப் பற்றி விரிவாக அமைச்சரிடம் கூறினார். உடனே அமைச்சர், நம் நாட்டு பூனைகள் எதற்கும் உபயோகம் ஆகாது போல, அயல் நாடுகளில் உள்ள பூனைகள், புலி உயரம் உள்ளன. அதனால் பூனைகளை அங்கிருந்து வரவழைப்போம் என்றார். அதேபோல் அயல்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அந்த எலி அந்தப் பூனைகளிடமிருந்தும் சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்து கொண்டது. எலிக்கு இவ்வளவு திறமையா? என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் மற்ற நாட்டு பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றார்.

ஆனால், அரசருக்கு அக்காவலன் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்று கேட்டார். சிறிது நேரம் கழித்து இளவரசர் அக்காவலனிடம், அவருடைய பூனையை எடுத்து வருமாறு கூறினார்.

காவலாளியும் வீட்டிற்குச் சென்று பூனையைக் கொண்டு வந்தார். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் ‘லபக்” என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

என்ன இது அதிசயம்! அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி, பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே. என் பூனைக்கு இப்போது ரொம்பப் பசியாக இருக்கிறது, அவ்வளவுதான் என்றார். அதைக்கேட்ட அரசரும், இளவரரும் எதுவும் கூறாமல் வாயடைத்து நின்றனர்.

அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை. எனவே, அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?

நீதி :

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், நாம் செய்கின்ற வேலையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். மேலும், அதனுடைய தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை சரியாக செய்து முடிக்க முடியும்.